பங்ளாதேஷ் சைக்கிளோட்டியை வாகனத்தால் மோதிக் கொலை செய்ய முயன்றதாகச் சிங்கப்பூர் ஆடவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தோ ஸி ஈ, 51, எனும் அந்தச் சிங்கப்பூரர் காக்கி புக்கிட்டில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிளோட்டியை வேனால் மோதிக் கொலை செய்ய முயன்றதாக வியாழக்கிழமை (ஜனவரி 15) விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டார்.
பங்ளாதேஷ் நாட்டவரான மறைந்த ஹொசைன் செலிம், 32 எனும் ஆடவர் மீது வாகனத்தை மோதிய பின்னர் சம்பவ இடத்திலிருந்து தோ தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அந்தச் சம்பவத்தில் திரு ஹொசைனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு அவர் சுயநினைவின்றி கோமா நிலைக்குச் சென்றார்; சில காலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் பிறகு மீண்டும் பங்ளாதேஷுக்குக் கொண்டு செல்லப்பட்டார்; எனினும் பிப்ரவரி 2025ல் அவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு ஹொசைன் மரணத்திற்கான காரணம் நீதிமன்றத்தில் கூறப்படவில்லை.
கடத்தல் சிகரெட்டுகள் தொடர்பான நடவடிக்கைகள் மூலமாகத் தோ, திரு ஹொசைனை அறிந்திருந்தார் என்று அரசுத் தரப்பின் தொடக்கவாதத்தின்போது தெரிவிக்கப்பட்டது.
மேலும், பாதிப்புக்குள்ளானவர் பிப்ரவரி 2023ல், சிங்கப்பூர் சுங்கத்துறை மேற்கொண்ட சோதனையின்போது கைது செய்யப்பட்டார் என்றும், தோ கைது நடவடிக்கையிலிருந்து தப்பினார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், ஹொசைன் தம்மைச் சிக்கவைத்ததாகச் சந்தேகித்ததால் தோ அவரை எதிர்த்தார் என்று அரசுத் துணை வழக்கறிஞர் ஹே ஹங் சுன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தோ தரப்பில் வழக்கறிஞர்கள் யூஜின் துரைசிங்கமும் இங் யுவான் சியாங்கும் வாதாடுகின்றனர்.
கொலை முயற்சிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், தோவுக்கு ஆயுள் தண்டனை அல்லது 20 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
அவர் 50 வயதுக்கு மேற்பட்டவர் என்பதால் அவருக்குப் பிரம்படி விதிக்க முடியாது.

