உட்லண்ட்சில் வேன் கவிழ்ந்தது; மூவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்

1 mins read
b27f4dbf-e945-46d4-a1f9-94945b2e1a8b
உட்லண்ட்ஸ் அவென்யூ 4- உட்லண்ட்ஸ் அவென்யூ 7 சந்திப்பில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) மாலை 5 மணியளவில் விபத்து நிகழ்ந்ததாக அறியப்படுகிறது. - படம்: ஷின் மின்

உட்லண்ட்சில் வேன், சைக்கிள், பாதசாரி தொடர்பான சாலை விபத்தைத் தொடர்ந்து மூவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

உட்லண்ட்ஸ் அவென்யூ 4, உட்லண்ட்ஸ் அவென்யூ 7 சந்திப்பில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) ஒரு வேன் சறுக்கி, விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து மாலை 5 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அமைப்பும் தெரிவித்தன.

இருவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கும் ஒருவர் உட்லண்ட்ஸ் சுகாதார வளாக மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. சுயநினைவுடன் இருந்த அந்த மூவரில் 60 வயது ஆண் வேன் ஓட்டுநர், 49 வயது ஆண் பாதசாரி, 29 வயது ஆண் சைக்கிளோட்டி ஆகியோர் அடங்குவர்.

வேன் ஓட்டுநர் காவல்துறை விசாரணையில் உதவி வருகிறார்.

‘எஸ்ஜி ரோடு விஜிலென்ஸ்’ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொளிக் காட்சிகளில், இடது புறத் தடத்தில் ஒரு வேன் இருப்பதையும், அது சாலைப் பிரிப்பு மீது ஏறி, போக்குவரத்து விளக்கை மோதுவதையும் காணலாம்.

போக்குவரத்து விளக்கு சாலையில் சரிந்து விழுந்தது. மோதிய வேகத்தில் வேன் தடம் புரண்டு, பல மீட்டர் தொலைவில் சென்று விழுந்தது.

சம்பவத்துக்குப் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், குறைந்தது மூன்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வாகனங்கள், பல சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வீரர்களைத் தளத்தில் காணலாம்.

குறிப்புச் சொற்கள்