இணையத்தில் இடம்பெறும் சட்டவிரோத மின்சிகரெட் நடவடிக்கைகளைக் குறிவைக்கும் இணையக் கண்காணிப்பு முறை ஒன்றை வாங்க சுகாதார அறிவியல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
சமூக ஊடகத் தளங்களில் மின்சிகரெட் பொருள்கள் விளம்பரப்படுத்தப்படுவதும் விற்கப்படுவதும் அத்தகைய நடவடிக்கைகளில் அடங்கும்.
இம்முறையின் தேடல் அம்சங்கள் (search functions) விரிவானவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், ஐபி முகவரிகள் போன்றவற்றுக்குத் தேடல் அம்சங்களைப் பயன்படுத்தலாம் என்பது எதிர்பார்ப்பு.
இந்த மின்னலக்க கண்காணிப்பு முறைக்கான ஒப்பந்தப்புள்ளிகளைச் சமர்ப்பிக்குமாறு சுகாதார அறிவியல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி கெபிஸ் (GeBIZ) தளத்தில் பதிவிட்டது. ஒப்பந்தப்புள்ளிகளைச் சமர்ப்பிக்க ஏப்ரல் 15ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
கவர்மென்ட் இலெக்ட்ரோனிக் பிஸ்னஸ் (Government Electronic Business) எனப்படும் கெபிஸ், மின்சேவைகளுக்கான அரசாங்கத்தின் ஒன்றிணைக்கப்பட்ட கொள்முதல் தளமாகும். அரசாங்கத் துறைக்கான அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளும் அத்தளத்தில் பதிவிடப்படும்.
சட்டவிரோத மின்சிகரெட் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கான முறை சுகாதார அறிவியல் ஆணையம், சுகாதார அமைச்சு இரண்டுக்குமானதாக இருக்கும் என்று ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
இரண்டு நிறுவனங்கள் அப்பதிவுக்குப் பதிலளித்தன.
அவற்றில் ஒன்றான காப்வெப்ஸ் ஏஷியா (Cobwebs Asia), 959,053 வெள்ளி மதிப்பிலான ஒப்பந்தப்புள்ளிகளை முன்வைத்தது. அந்நிறுவனம், பென்லிங்க் எனப்படும் அமெரிக்க இணையக் கண்காணிப்பு நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளையாகும்.
தொடர்புடைய செய்திகள்
அது, இஸ்ரேலிய கண்காணிப்புச் சேவை நிறுவனமான காப்வெப்ஸ் டெக்னாலஜீசுடன் 2023ஆம் ஆண்டு இணைந்தது.
பதிலளித்த மற்றொரு நிறுவனம், சிங்கப்பூரின் மின்னிலக்க தடயவியல் நிறுவனமான (digital forensics company) டலோன் லபோரட்ரீஸ். அந்நிறுவனம், 422,000 வெள்ளி மதிப்பிலான ஒப்பந்தப்புள்ளிகளை முன்வைத்தது.
டலோன் லபோரட்ரீஸ், முன்னாள் உள்ளூர் சட்ட அமலாக்க அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் தொடங்கப்பட்டது.
இரு நிறுவனங்களின் தளங்களும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆற்றல் கொண்டவை. அதைக்கொண்டு இணையத்தில் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு தேவையான தகவல்களை நேரடியாகத் (real-time) தெரிந்துகொள்ளலாம்.
புதிய கண்காணிப்பு முறையை உருவாக்க நிறுவனம் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
சிங்கப்பூரில் பெரும்பாலான மின்சிகரெட் பரிவர்த்தனைகள் டெலிகிராம் குறுந்தகவல் செயலிவழி மேற்கொள்ளப்படுகின்றன. சமூக ஊடகத் தளங்கள், மின்வர்த்தகத் தளங்கள் ஆகியவற்றுடன் டெலிகிராம் செயலியையும் சுகாதார அறிவியல் ஆணையம் கண்காணித்துவருகிறது.
மின்சிகரெட்டுகளை விளம்பரப்படுத்திவந்த 600க்கும் அதிகமான டெலிகிராம் கணக்குகளைச் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து தாங்கள் அகற்றியிருப்பதாக சுகாதார அறிவியல் ஆணையம் கடந்த புதன்கிழமை (ஜூலை 16) கூறியது.