மின்சிகரெட் விற்பனை: 6,000 விளம்பரங்கள் இணையத்திலிருந்து நீக்கம்

1 mins read
சென்ற ஆண்டைக் காட்டிலும் ஒரு மடங்கு அதிகம்
74ec10d0-6062-4b76-97d2-456eda7b8505
காப்பிக் கடைகள், உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் போன்றவற்றின் உரிமையாளர்கள் இணைந்துள்ள நான்கு வர்த்தகச் சங்கங்கள் கடந்த மார்ச் மாதம் மின்சிகரெட் பயன்பாட்டுக்கு எதிரான இயக்கத்தைத் தொடங்கின. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மின்சிகரெட் விற்பனை தொடர்பான ஏறக்குறைய 6,000 விளம்பரங்களை இணையத்திலிருந்து அதிகாரிகள் நீக்கியுள்ளனர்.

மின்சிகரெட் விற்பனைக்கான இணைய விளம்பரங்கள் மீது கூடுதல் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அவை அவ்வாறு நீக்கப்பட்டன.

ஒப்புநோக்க, சென்ற ஆண்டு முழுவதும் இணையத்திலிருந்து நீக்கப்பட்ட மின்சிகரெட் விற்பனை விளம்பரங்களின் எண்ணிக்கை 3,000 ஆகும்.

ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் ரிசாலின் கேள்விக்கு நவம்பர் 13ஆம் தேதி அளித்த எழுத்துபூர்வமான பதிலில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.

மின்சிகரெட்டுகளை வைத்திருந்தது அல்லது பயன்படுத்தியது தொடர்பில் கூடுதலானோர், குறிப்பாக இளையர்கள் பிடிபடும் சம்பவங்களும் அபராதம் விதிக்கப்படுவதும் அதிகரித்திருப்பதாக டாக்டர் வான் ரிசால் கூறியிருந்தார்.

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 9,680 பேர் மின்சிகரெட் பயன்படுத்தியது அல்லது வைத்திருந்ததன் தொடர்பில் பிடிபட்டனர். சுகாதாரத் துறை அதிகாரிகள் முன்னர் இந்த எண்ணிக்கையை வெளியிட்டிருந்தனர்.

சென்ற ஆண்டு முழுவதும் அவ்வாறு பிடிபட்டோர் எண்ணிக்கை 7,838 என்று அவர்கள் கூறினர்.

சுகாதார அறிவியல் ஆணையம், இணையத்தில் மின்சிகரெட் குறித்த விளம்பரங்கள், அதன் விற்பனை தொடர்பிலான நடவடிக்கைகளுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கையை அதிகரித்ததாக அமைச்சர் ஓங் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

ஆணையம் இதன் தொடர்பில் இணையத்தள உரிமையாளர்களிடம் பேசியதாகக் கூறிய அமைச்சர், அந்தத் தளங்கள் குறித்த மேல்விவரங்களை வெளியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்