ஒற்றைத் தந்தையான ஷோன் ஃபுவா மிங் ஹுய், வாரந்தோறும் இருமுறை மின்சிகரெட்டுகளை விநியோகித்து வந்தார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவருக்கு நண்பர் ஒருவர் இந்த வேலையை அறிமுகப்படுத்தினார். கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு இவர் டெலிகிராம் தளத்தில் மின்சிகரெட் கடையை நடத்திக் கூடுதல் வருமானம் ஈட்டத் தொடங்கினார். இதன்மூலம், மின்சிகரெட் வாங்க வாடிக்கையாளர்கள் பதிவுசெய்து வந்தனர்.
முறியடிப்பு நடவடிக்கையின்போது வாடிக்கையாளரைப் போல் நடித்த சுகாதார அறிவியல் ஆணைய அதிகாரியிடம் மின்சிகரெட்டுகளை விநியோகித்தபோது ஃபுவா பிடிபட்டார்.
32 வயது ஷோனுக்கு திங்கட்கிழமை (டிசம்பர் 1) ஏழு வாரச் சிறைத் தண்டனையும் 16,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டன. அபராதத்தைச் செலுத்த முடியாமல் போனால் ஷோன் கூடுதலாக 32 நாள்கள் சிறைத் தண்டனையை நிறைவேற்றவேண்டும்.
தன் மீது சுமத்தப்பட்ட மின்சிகரெட் தொடர்பான 10 குற்றச்சாட்டுகளை ஷோன் ஒப்புக்கொண்டார். தீர்ப்பளிக்கும்போது மேலும் 35 குற்றச்சாட்டுகள் கருத்தில்கொள்ளப்பட்டன.
மின்சிகரெட் விநியோக வேலையை, 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நண்பர் ஒருவர் ஃபுவாவுக்கு அறிமுகப்படுத்தினார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு மின்சிகரெட் விநியோகத்துக்கும் 10 வெள்ளி வழங்கப்படும் என்று ஃபுவாவுக்கு உறுதியளிக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு நாளும் 10லிருந்து 15 பொட்டலங்களை விநியோகிக்க வேண்டியிருந்தது. அதன்மூலம் ஃபுவா தினமும் 100லிருந்து 150 வெள்ளி வரை ஈட்டினார்.
விநியோக ஓட்டுநர்களுக்கென செயல்பாட்டில் இருந்த டெலிகிராம் கணக்கில் ஃபுவா சேர்க்கப்பட்டார். அந்தக் கணக்கில்தான் விநியோக ஓட்டுநர்களுக்கான பணிகள் வழங்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
பிறகு 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஒருவரின் அழைப்பை ஏற்று கூடுதல் வருமானம் ஈட்ட ஃபுவா மின்சிகரெட்டுகளையும் அவை தொடர்பான சாதனங்களையும் விற்க ஒப்புக்கொண்டார்.
நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்படாத அந்நபர், ஃபுவாவின் கைப்பேசியில் ‘அபிகெயில் வேப் ஷாப்’, ‘ஏஷ்லி டேங்’ (Abigail vape shop, Ashley Tang) என்ற டெலிகிராம் கணக்குகளைத் தொடங்கி வைத்தார். அந்த டெலிகிராம் கணக்குகளின் மூலம் ஃபுவா மின்சிகரெட் விற்பனையில் ஈடுபட்டார்.
சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி சுகாதார அறிவியல் ஆணைய அதிகாரிகள், புக்கிட் கொம்பாக்கில் உள்ள குய்லின் வியூ (Guilin View) கொண்டோமினிய வளாகத்தில் நடத்திய முறியடிப்பு நடவடிக்கையின்போது அவர் பிடிபட்டார்.

