தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்சிகரெட் விவகாரம்: பி‌ஷானில் தப்பியோட முயன்றதாக நம்பப்படுபவர்மீது ஆறு குற்றச்சாட்டுகள்

2 mins read
d57dd8f3-5044-47c2-b8a1-9ff9abbc426e
சந்தேக நபர் ஜோடன் சின் வெய் லியாங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கேபோட் வகை மின்சிகரெட்டுகளை விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர், சுகாதார அறிவியல் ஆணைய அதிகாரிகள் மின்சிகரெட் முறியடிப்பு நடவடிக்கையை மேற்கொண்டபோது தப்பியோடியதாக நம்பப்படுகிறது.

சந்தேக நபரான 27 வயது ஜோடன் சின் வெய் லியாங்மீது வெள்ளிக்கிழமை (ஜுலை 18) ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இம்மாதம் 10ஆம் தேதி நிகழ்ந்த சுகாதார அறிவியல் ஆணையத்தின் முறியடிப்பு நடவடிக்கை குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 14ஆம் தேதி செய்தி வெளியிட்டது. கேபோட் மின்சிகரெட்டுகளைத் தன்னால் விற்க முடியும் என்று கூறிய ஒருவர், ஆணைய அதிகாரிகள் தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட பிறகு தனது காரில் தப்பியோட முயன்றதாக நம்பப்படுகிறது.

மின்சிகரெட்டுகளை விற்றதாகவும் அவற்றை வைத்திருந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

சின்னின் வழக்கில் அதிக அளவில் கேபோட் மின்சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவரின் வழக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கேபோட் என்பது எட்டோமிடேட், கெட்டமின் போன்ற போதை மருந்து வகைகள் கலந்து தயாரிக்கப்படும் மின்சிகரெட்டாகும். எட்டோமிடேட், பொதுவாக மருத்துவமனைகளில் சிகிச்சையளிப்பதற்காக ஒருவரை மயக்கநிலைக்குக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் போதை மருந்தாகும். அது, சுவாசிப்பதற்கானது அல்ல.

மின்சிகரெட் மூலம் அது சுவாசிக்கப்பட்டால் ஒருவர் மூச்சுத் திணறல், இயல்பு நிலையுடன் தொடர்பில்லாமல் போவது போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகலாம்.

எட்டோமிடேட், சிங்கப்பூரின் நச்சு சட்டத்தின்கீழ் நச்சுத்தன்மைகொண்ட ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதை இறக்குமதி செய்யவும் விற்கவும் உரிமம் பெறவேண்டும்.

அச்சட்டத்தின்கீழ் எட்டோமிடேட் உள்ள மின்சிகரெட்டுகளை வைத்திருப்பதோ அவற்றைப் பயன்படுத்துவதோ நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு ஈராண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் கேபோட் மின்சிகரெட் விவகாரம், கவலை தரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்