கொள்ளைநோய்ப் பரவலால் தாமதமடைந்த வீட்டுத் திட்டங்களில் 94% நிறைவு: வீவக

2 mins read
0134a9d8-475c-4f89-9d7f-c04dc2c5095e
பிடாடாரியில் கடந்த ஜூன் மாதம் கட்டி முடிக்கப்பட்ட அல்காஃப் பிரீஸ் வீவக திட்டம். - படம்: வீவக

இவ்வாண்டின் முதல் எட்டு மாதங்களில் சுமார் 10,500 வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலினால் அவற்றில் பெரும்பாலானவற்றைக் கட்டி முடிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக வீவக குறிப்பிட்டது. கொள்ளைநோய்ப் பரவலால் தாமதமடைந்த வீட்டுக் கட்டுமானத் திட்டங்களில் 94 விழுக்காட்டுத் திட்டங்கள் நிறைவடைந்துவிட்டதாகவும் வீவக தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட வீவக வீட்டுத் திட்டங்களின் எண்ணிக்கை 87. அவை 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இவ்வாண்டு ஆகஸ்ட் மாத இறுதிக்குட்பட்ட காலத்தில் நிறைவடைந்தன.

இவ்வாண்டு கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்குக் காத்திருக்கவேண்டிய காலம் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு இடைப்பட்டிருப்பதாக வீவக திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 2) அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. கொள்ளைநோய்ப் பரவலால் ஏற்பட்ட தாமதம் கருத்தில்கொள்ளப்பட்டதாக வீவக சொன்னது.

தற்போதைய நிலவரப்படி 24 திட்டங்களில் அடங்கும் ஏறத்தாழ 18,000 வீவக அடுக்குமாடி வீடுகள் இவ்வாண்டு கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அது குறிப்பிட்டது. கொவிட்-19 கிருமிப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட தேவைக்கேற்ப கட்டப்படும் பிடிஓ வீட்டுத் திட்டங்களைக் கட்டி முடிப்பதில் ஆறிலிருந்து 12 மாதங்கள் வரை தாமதம் ஏற்படலாம் என்று வீவக முன்னதாகக் கணித்திருந்தது.

தாமதமடைந்த எஞ்சிய வீட்டுத் திட்டங்கள் வரும் ஆறு மாதங்களில் கட்டி முடிக்கப்படும் நிலையில் இருப்பதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார்.

கொள்ளைநோய்ப் பரவலால் ஏற்பட்ட தாமதம் வீவகவின் கட்டுமானத் திட்டத்துக்கு இடையூறு விளைவித்ததோடு வீடு வாங்கியோருக்கு பாதிப்பு ஏற்படுத்தியதை உணர்வதாகக் கூறிய அமைச்சர் டெஸ்மண்ட் லீ, “இத்திட்டங்களில் ஏற்பட்ட தாமதத்தை ஈடுகட்டும் வகையில் விரைவில் கட்டி முடிக்க எங்கள் சக வீவக ஊழியர்கள், ஆலோசகர்கள், கட்டுமானப் பணிகளை நடத்துபவர்கள் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டிருக்கின்றனர்.

“இந்தக் காலகட்டத்தில் நிலைமையைப் புரிந்துகொண்டதற்காகவும் பொறுமையாக இருந்ததற்காகவும் வீடு வாங்கியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று சொன்னார்.

கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தைச் சமாளிக்க வீவக விற்பனைக்கு விடப்படும் வீடுகளின் எண்ணிக்கையை அதிகரித்தது. அதேவேளை, கட்டுமானப் பணிகளுக்கான காலம் குறைக்கப்பட்டதால் சில குடியிருப்பாளர்கள் சவால்களை எதிர்கொள்ளவும் நேரிட்டது.

குறிப்புச் சொற்கள்