புதிதாகச் சுதந்திரம் பெற்ற சிங்கப்பூருக்கு, கொந்தளிப்பு மிகுந்த வட்டார, உலகச் சூழலில் நிலைத்திருக்க வலுவான ராணுவத் தற்காப்பு தேவைப்பட்டது. 1969ல் முதன்முதலாக உருவாக்கப்பட்ட மின்னற்படை, 1972ல் தேசிய சேவையாளர்களைச் சேர்க்கத் தொடங்கியது.
முக்கியமான அந்தக் காலகட்டத்தில் தற்காப்புப் படையினர் சிங்கப்பூருக்காகக் கடினமாக உழைத்துத் தங்களை வலுப்படுத்தினர்; வைரம் போன்று தங்களை உடலறுதி மிக்கவர்களாக ஆக்கிக்கொண்டனர்.
சிங்கப்பூர் 60 வயதை எட்டிய வேளையில், தம்மளவிலும் அறுபது வயதைத் தொட்ட முன்னாள் மின்னற்படை வீரர்கள் மூவர் தங்கள் பயிற்சி அனுபவத்தைத் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர்.
1983ஆம் ஆண்டில் ‘கொமாண்டோ’ எனப்படும் மின்னற்படையில் சேர்வதற்கு வாய்ப்பு கிடைத்த ஆர். ஜெயசெல்வம், தேவைப்பட்ட உடலுறுதிச் சோதனைகளை வெற்றிகரமாகக் கடந்து தேர்வுசெய்யப்பட்டதாகக் கூறினார்.
“பழைய சாங்கி முகாமில் நாங்கள் இருந்தோம். இரண்டரை ஆண்டுகளாக நாங்கள் படையில் செயல்பட்டோம்,” என்றார் திரு செல்வம்.
அதே முகாமில் பயிற்சி பெற்ற திரு எஸ். விஜயகுமார், முதன்முதலாக அங்கு சென்றபோது தாம் உணர்ந்த நடுக்கத்தை நினைவுகூர்ந்தார்.
தற்போது சுயதொழிலில் ஈடுபட்டுவரும் திரு செல்வம், பார்ப்பதற்குப் போர்க்கைதிகளுக்கான முகாம் போல அந்த முகாம் தோற்றமளித்ததாக நகைச்சுவையாகக் கூறினார்.
இருந்தபோதும், முகாமில் கடுமையாகப் பயிற்சி செய்த சிலர் தொடக்கத்தில் தனிமையாக உணர்ந்ததாகவும் அவர் சொன்னார். “சிலர் இரவு உறக்கத்தின்போது அழுதனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
தொடக்கத்தில் தம்மையும் அச்சம் தொற்றியபோது, சக வீரர்கள் கொடுத்த ஊக்கத்தால் அதனை முறியடித்ததாகக் கூறினார் திரு கார்த்திகேசன் பக்கிரிசாமி.
“சாதாரண ராணுவ வீரர்களைக் காட்டிலும் எங்கள் படைப்பிரிவனர் அதிகம் பயிற்சி செய்யவேண்டியிருந்தது. 2.4 கிலோமீட்டர் தொலைவை எட்டு நிமிடங்களுக்குள் ஓடிக் கடப்பது, கடலில் 1.5 கிலோமீட்டர் வரை நீந்துவது, 10 கிலோமீட்டர் வரை ஓட்டம் உள்ளிட்டவற்றைச் செய்ய வேண்டிருந்தது. “
“அத்துடன், ஒன்பது மாதங்கள் நிறைவுறும் தருவாயில் நாங்கள் இரவு நேரத்தில் 72 கிலோமீட்டர் நடந்துவரவேண்டும். நடந்து முடிந்தால்தான் சிவப்புப் தொப்பி. இல்லையென்றால் கிடைக்காது,” என்று திரு கார்த்திக் நினைவுகூர்ந்தார்.
மின்னற்படைப் பிரிவில் முழுநேரமாகச் சேவையாற்றிய திரு கார்த்திக், தற்போது பாதுகாவல் நிறுவனம் ஒன்றில் செயலாக்க நிர்வாகியாகப் பணிபுரிகிறார்.
சிறந்த வீரர்களாக மிளிர்ந்த இந்தியர்கள்
தங்களது காலகட்டத்தில் மின்னற்படையில் சேர்ந்த 210 பேரில் 39 பேர் இந்தியர்கள் என்று மூவரும் பெருமிதத்துடன் கூறினர். அவ்வாண்டில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் மின்னற்படையில் சேர்ந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்திய இனத்தவர்கள் பலர் அந்த உயரிய படையில் சேர்ந்து உயரதிகாரிகளாகவும் பயிற்றுவிப்பாளர்களாகவும் உயர்ந்ததை இந்தப் பெரியவர்கள் பெருமையுடன் சுட்டினர். தற்போது இந்தியர்கள் அவ்வளவு பேர் அந்தப் படையில் இல்லையே என்ற வருத்தமும் இவர்களுக்கு உள்ளது.
“காலப்போக்கில் அந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 10, 15 எனக் குறைந்து பின்னர் பத்துக்கும் கீழே இறங்கியது. இதில் சேர்வது எளிதன்று என்பதே உண்மை. தகுதிபெறுவதற்கான உடற்கட்டுத் தரநிலை மிக உயர்வாக உள்ளது,” என்று அவர் சொன்னார்.
பயிற்சியின் கடுமையைப் பற்றித் தம் தாயார் ஓராண்டுக்குப் பிறகே அறிந்ததாகக் கூறிய திரு செல்வம், உண்மை அறிந்த அந்தத் தாயார், மனம் வெதும்பி அழுததாகக் கூறினார்.
“பயிற்சி கடினமாகத்தான் இருந்தது. ஆனால், வேறு வழி இல்லை. சிங்கப்பூரர்களாகப் பிறந்த எங்களுக்குத் தேசிய சேவை ஆற்றுவது கடமையாகும்,” என்றார் அவர் .
“சேவையாற்றியது கடமையாக இருந்தபோதும் மின்னற்படையில் சேர்வதில் நிச்சயம் தனிப்பெருமை உள்ளது. ஏனெனில் அந்தப் படைக்கு உரித்தான சிவப்புத் தொப்பியை எந்தக் கடையிலும் பெற முடியாது. பாடுபட்டு உழைத்து, காட்டிலும் நீரிலும் கடுமையாகப் போராடிப் பெற்றது,” என்று திரு கார்த்திக் கூறினார்.
மறக்க முடியாத தருணங்கள்
நடுவானில் விமானத்திலிருந்து வான்குடையுடன் குதித்து இறங்கிய திரு விஜய், தோள்ப் பைக்குள் இருந்த ஆயுதம் ஒன்று விமானத்தின் இடுக்கு ஒன்றில் சிக்கிய திகில் சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
“பறந்துகொண்டிருந்த விமானத்திலிருந்து அதிக உயரத்திலிருந்து தொங்கிக்கொண்டிருந்தேன்”.
பயங்கரமான அந்தச் சூழலிலும் முன்பு பயிற்சி செய்த சமிக்ஞைகளைக் காண்பித்து அவர் நிதானம் காத்தார். சிறிது நேரத்தில் அவரது கவண்கயிறு (sling) அறுக்கப்பட்டது. தரையிறங்க வேண்டிய இடத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளி அவர் இறங்கினார்.
ரேம்போ படம் ஒன்றில் இத்தகைய ஒரு சம்பவம் சித்திரிக்கப்பட்டது என்று நகைச்சுவையாகச் சகாக்கள் சிலர் கூறினாலும் கை முழுவதுமாக அறுக்கப்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் அவரை இன்றளவும் உறைய வைக்கிறது. ஆனாலும், வீரராகச் சேவையாற்றி முடிந்த வரையில் அவர் தொடர்ந்து வான்குடைப் பயிற்சிகளில் ஈடுபட்டார்.
மறக்க முடியாத இன்பகரமான அனுபவங்களில் தேசிய தின அணிவகுப்புகள் முக்கியமானவை என்று மூவருமே குறிப்பிட்டனர். 1985ல் நடைபெற்ற தேசிய தின அணிவகுப்பில் தாங்கள் மூவருமே மரியாதைக் காவலராகச் செயலாற்றிய நினைவுகளையும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
வேற்றுமைகளைத் தகர்த்த ஒற்றுமை
இன, மொழி வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அனைவரும் பழகி வந்ததாகக் குறிப்பிட்ட திரு செல்வம், தாமும் தம்முடன் மின்னற்படையில் சேவையாற்றியவர்களும் கடந்த 41 ஆண்டுகளாகத் தொடர்பில் இருந்துவந்ததாகக் கூறினார்.
“ஆண்டுதோறும் ஆண்டிறுதியில் எல்லாரும் ஒன்றுகூடுவோம். பல வேலைகளுக்கும் அலுவல்களுக்கும் இடையே இதற்காக நேரத்தை ஒதுக்குவோம். கிட்டத்தட்ட 80-85 பேர் வருவார்கள்,” என்று திரு செல்வம் கூறினார்.
ஒருவருக்கொருவர் நல்வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்வோம் என்றார் திரு விஜய்.
தங்களைவிட மூத்த வீரர்களையும் அதிகாரிகளையும் மரியாதையுடன் நடத்தும் பாங்கு இவர்களிடையே நிலவுகிறது.
“புடம்போட்ட தங்கம்போல மின்னற்படைப் பயிற்சி எங்கள் எல்லோரையும் உயர்தர மனிதர்களாக மாற்றியதை எண்ணி மகிழ்கிறோம். 18 வயது ஆண் பிள்ளைகளை ஆடவர்களாக மாற்றுவது நம் ராணுவப் பயிற்சி. இந்த ராணுவப் பயிற்சி தொடர்ந்து இருப்பது முக்கியம்,” என்கிறார் திரு கார்த்திக்.

