மலேசியாவில் கனமழை தொடர்ந்தால் காய்கறி விலை ஏறக்கூடும்

2 mins read
80376660-b9aa-4d42-bfce-2d69a208230f
ஒரு கிலோ தக்காளி 5 ரிங்கிட்டிற்குமேல் (ஏறத்தாழ S$1.57) விற்கப்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன. - படம்: த ஸ்டார்/ஏஷியா நியூஸ் நெட்வொர்க்

பெட்டாலிங் ஜெயா: நாட்டில் பருவமழை தொடர்ந்து பெய்தால் காய்கறிகளின் விலை ஏறக்கூடும் என்று மலேசியக் காய்கறி விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் லிம் செர் குவீ, அண்மையில் தாய்லாந்து, வியட்னாம், இந்தோனீசியா போன்ற நாடுகளில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்குக் காய்கறிகளின் விலை அதிகரித்ததைச் சுட்டினார்.

“இந்த மூன்று நாடுகளிலிருந்தும் நாம் பெருவாரியான காய்கறிகளை இறக்குமதி செய்கிறோம். அந்நாடுகளில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் காய்கறி விலை அதிகரித்துள்ளது,” என்றார் அவர்.

மேலும், சீனாவில் திடீரென்று ஏற்பட்ட குளிரால் விளைச்சல் பாதிக்கப்பட்டதையும் அதனால் காய்கறி விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவின் அண்மைய வெள்ளத்தில் கேமரன் மலைப் பகுதியும் ஜோகூர், பாகாங், மலாக்கா போன்ற மாநிலங்களும் அதிகம் பாதிப்படையவில்லை என்றாலும் வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் விளைச்சல் பாதிக்கப்பட்டது என்று திரு லிம் சொன்னார்.

போதுமான சூரிய ஒளி இல்லாததால் தக்காளி போன்ற காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

முன்னர் கிலோ 2 ரிங்கிட் முதல் 4 ரிங்கிட் வரை விற்கப்பட்ட தக்காளி, இப்போது 5 ரிங்கிட்டிற்குமேல் (S$1.57) விற்பனையாவதாகத் திரு லிம் கூறினார்.

ஜோகூர், பாகாங் போன்ற வட்டாரங்களில் மழை தொடர்ந்தால் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்றார் அவர்.

காய்கறி விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பில் நாடு முழுவதும் 6,000 பேர் உறுப்பினராக உள்ளனர். அவர்கள் இன்னும் உண்மையான இழப்பின் அளவைக் கணக்கிடவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், 2026 மார்ச் மாதம் வரை வடகிழக்குப் பருவ மழை தொடரும் என்று மலேசிய வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஐந்து முதல் ஏழு முறை கனமழைச் சம்பவங்கள் நிகழ வாய்ப்புண்டு எனக் கருதப்படுகிறது. அதனால் தாழ்வான பகுதிகளிலும் ஆற்றங்கரையோரப் பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.

மலாக்கா நீரிணையில் உருவாகியுள்ள சென்யார் புயலால் பலத்த காற்று வீசுவதுடன் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள், கால்நடைப் பண்ணை உரிமையாளர்கள், மீனவர்களுக்கு உதவப் பேரிடர் நிவாரணப் பிரிவு நவம்பர் 28ஆம் தேதியிலிருந்து தயாராக இருப்பதாக மலேசியாவின் வேளாண், உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்