துவாசில் வேனும் கொட்டுந்தும் (Tipper Truck) மோதிய விபத்தைத் தொடர்ந்து, மூவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
துவாஸ் அவென்யூ 2ஐ நோக்கிச் செல்லும் துவாஸ் கிரசென்டில் திங்கட்கிழமை (பிப்ரவரி 3) நிகழ்ந்த இவ்விபத்து குறித்து காலை 6.15 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
வேனை ஓட்டிச் சென்ற 33 வயது ஆடவரும் அதிலிருந்த 38 மற்றும் 44 வயது நிரம்பிய ஆடவர் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் காவல்துறை கூறியது.
அவர்களில் இருவர் இங் டெங் ஃபோங் மருத்துவமனையிலும் ஒருவர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது.
விபத்து குறித்த படங்களை சீன நாளிதழான ஷின் மின் வெளியிட்டுள்ளது.
வேனின் முன்பகுதி கடுமையாகச் சேதமுற்றதையும் அதன் முன்புற டயர்களில் ஒன்று இல்லாததையும் அப்படங்கள் காட்டின.

