சிங்கப்பூரில் அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டண முறைக்கான ஓபியு எனப்படும் வாகன உள்ளமைப்புகள் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 முதல் கட்டாயமாக்கப்படவுள்ளன.
இந்நிலையில், தங்களது வசதிக்கேற்பவும் வாகனத்தின் உட்புற அழகிற்காகவும் வெளிப்புற உதிரிப் பாகங்கள் மற்றும் துணைக்கருவிகளைப் பயன்படுத்தி ஓபியு அமைவிடத்தை மாற்றியமைக்க சில வாகன ஓட்டுநர்கள் $300 வரை செலவிட்டு வருகின்றனர்.
மின் கட்டண அட்டைகளை எளிதில் எட்டும் வகையில் ஓபியு தொடுதிரை மற்றும் அட்டைப் பதிவு சாதனத்தை மாற்றி அமைக்கும் சேவைகளை வாகனப் பட்டறைகளும் இணையச் சந்தைகளும் $10 முதல் $300 வரையிலான கட்டணத்தில் வழங்குகின்றன.
இருப்பினும், இத்தகைய அங்கீகரிக்கப்படாத மாற்றங்களைச் செய்வதன் மூலம் ஓபியு சாதனத்தின் ஐந்து ஆண்டுகால உத்தரவாதம் ரத்தாகும் அபாயம் உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் எச்சரித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத மாற்றங்களைச் செய்வதன் மூலம் ஓபியுவின் செயல்பாடு பாதிக்கப்படக்கூடும் என்று அது கூறியது.
ஓபியு பொருத்தப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
உத்தரவாதம் ரத்தானால், சாதனத்தின் பாகங்களை மாற்றுவதற்கு $220க்கும் மேல் கூடுதல் செலவாகும் என்று வாகனத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

