புக்கிட் தீமா விரைவுச்சாலையின் வெளிவழியொன்றில் போக்குவரத்துக் காவல்துறை வாகனம் ஒன்று தீப்பற்றியதில், புகையைச் சுவாசித்த போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் உட்லண்ட்ஸ் நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் சிலேத்தார் விரைவுச்சாலைக்கான வெளிவழியில் வெள்ளிக்கிழமை அதிகாலை மணி 12.10க்கு நிகழ்ந்தது. காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
அதிகாரிகள் இருவரும் சுற்றுக்காவல் பணியில் இருந்தபோது, வாகனத்தின் இயந்திரப் பகுதியில் இருந்து புகை வருவதைக் கண்டு உடனடியாக வெளியேறியதாகக் காவல்துறை தெரிவித்தது. பின்னர், அந்த அதிகாரிகளும் பொதுமக்களில் ஒருவரும் இணைந்து தீயை அணைக்க முயன்றனர்; அதன் பிறகு, குடிமைத் தற்காப்புப் படையின் தீயணைப்பாளர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்துத் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தினர்.
புகையைச் சுவாசித்ததால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் இருவரும் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட காணொளி ஒன்றில், சாலை வளைவின் இடப்புறத்தில் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிவது தெரிகிறது. அப்போது அந்தச் சாலையில் வேறு எந்த வாகனமும் செல்லவில்லை.
அதே காணொளியின் பிற்பகுதியில், தீப்பற்றி எரிந்த வாகனத்திலிருந்து அடர்ந்த புகை எழும்புவதையும் தீயணைப்பாளர்கள் சிலர் நெருப்பை அணைக்கப் போராடுவதையும் காணமுடிகிறது.


