அடுத்த 3 மாதங்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் ஒதுக்கீடு 1.1% அதிகரிப்பு

அடுத்த 3 மாதங்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் ஒதுக்கீடு 1.1% அதிகரிப்பு

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

26 Oct 2026 - 8:18 pm

2 mins read

சிங்கப்பூரில் 2026 நவம்பர் முதல் 2027 ஜனவரி வரையிலான காலாண்டில் ஏலத்திற்கு விடப்படும் வாகன உரிமைச் சான்றிதழ்களின் எண்ணிக்கை ஒரு விழுக்காடு கூடி, 19,298ஆக உயரும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

நடப்பு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலாண்டோடு ஒப்பிடும்போது கூடுதலாக 213 சான்றிதழ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பெரிய, அதிக ஆற்றல் வாய்ந்த கார்களுக்கான ‘பி’ பிரிவுச் சான்றிதழ்கள் 3.3 விழுக்காடு உயர்ந்து 5,707ஆக அதிகரிக்கும். இதன்மூலம் அடுத்த ஆறு ஏலக் குத்தகைகளில் ஒவ்வொன்றிலும் கூடுதலாக 30 சான்றிதழ்கள் கிடைக்கும்.

சிறிய, குறைந்த ஆற்றல் கொண்ட கார்களுக்கான ‘ஏ’ பிரிவு ஒதுக்கீடு எவ்வித மாற்றமுமின்றி 7,134ஆகவே நீடிக்கும். வர்த்தக வாகனங்களுக்கான ‘சி’ பிரிவு ஒதுக்கீடு இரண்டு விழுக்காடு உயர்ந்து 1,873ஆகவும், பொதுப் பிரிவான ‘இ’ பிரிவு 3.7 விழுக்காடு கூடி 1,580ஆகவும் அதிகரிக்கும்.

எனினும், மோட்டார்சைக்கிள்களுக்கான ‘டி’ பிரிவு ஒதுக்கீடு மட்டும் இரண்டு விழுக்காடு குறைந்து 3,004ஆகச் சரியும். முந்தைய நான்கு காலாண்டுகளில் பதிவுநீக்கம் செய்யப்பட்ட வாகனங்களின் அடிப்படையிலேயே இந்த ஒதுக்கீடு நிர்ணயிக்கப்படுகிறது.

வாகன உரிமைச் சான்றிதழ்களுக்கான தேவை வலுவாக உள்ளதால் அண்மைக்காலமாக அவற்றின் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அக்டோபர் 21ஆம் தேதி நடந்த ஆக அண்மைய ஏலத்தில், ‘ஏ’ பிரிவுக் கட்டணம் $132,004ஆகவும் ‘பி’ பிரிவுக் கட்டணம் $131,901ஆகவும் பதிவாயின. இந்நிலையில், வாகன உரிமைச் சான்றிதழ் வகைப்பாட்டுக் கட்டமைப்பு குறித்த பொதுக் கலந்தாலோசனை நவம்பர் 2ஆம் தேதி இரவு 11.59 மணிக்கு நிறைவடைகிறது.

குறிப்புச் சொற்கள்