மலேசியாவில் வாகனத் திருட்டுச் சம்பவங்கள்: சந்தேக நபர் சிங்கப்பூரில் கைது

மலேசியாவில் வாகனத் திருட்டுச் சம்பவங்கள்: சந்தேக நபர் சிங்கப்பூரில் கைது

2 mins read
7b6e5e9e-2d38-4b2e-93ca-de81905385bb
மலேசியாவில் வாகனத் திருட்டு, வாகனப் பதிவு விவரத் திருட்டு ஆகியவற்றில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முகமது மசுவான் அப்துல்லா சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

திருடப்பட்ட வாகனங்களைச் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்குக் கடத்துவதில் உடந்தையாக இருந்த சந்தேக நபர் ஒருவர் திங்கட்கிழமை (மார்ச் 23) சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இத்திருட்டுக் குற்றத்தின் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 39 வயது முகமது மசுவான் பின் அப்துல்லா மலேசியர்.

கடந்த ஆண்டு நவம்பர் 22, 23ஆம் தேதி வாக்கில், சுங்கை காடுட் பகுதியிலிருந்து பதிவு நீக்கம் செய்யப்பட்ட வாகனம் ஒன்றை மசுவான் திருடியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.

இந்தத் திருட்டானது, மலேசியாவின் பல மாநிலங்களில் இயங்கி வந்த ஒரு மிகப் பெரிய வாகனத் திருட்டு, வாகனப் பதிவு விவரத் திருட்டுக் கும்பலின் நடவடிக்கைகளில் ஒரு பகுதி என்று நம்பப்படுகிறது.

கிட்டத்தட்ட ஐந்து மாத உளவுத் தகவல் சேகரிப்புக்குப் பிறகு மலேசியாவின் ‘புக்கிட் அமான்’ குற்றப் புலனாய்வுத் துறை அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டது.

மார்ச் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் 33 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் 10 பேரும் பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

திருட்டுப்போன 12 வாகனங்கள் மலேசியாவில் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 1.1 மில்லியன் ரிங்கிட். அவற்றில் நான்கு வாகனங்கள் சிங்கப்பூரில் திருடப்பட்டதாக நம்பப்படுகிறது.

கூடுதல் விசாரணைகள், எல்லை தாண்டிய நடவடிக்கைகளுக்கு வகைசெய்வதற்காக மலேசியக் காவல்துறை, சிங்கப்பூர்க் காவல்துறையுடன் அணுக்கமாக இணைந்து செயல்படும்.

மசுவான், செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) விசாரணைக்காக மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்