ஈசூனில் வாகனம் நிறுத்தும் இடத்திலிருந்து கார் ஒன்றைத் திருடிய சந்தேகத்தின்பேரில் 36 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) தெரிவித்தது.
புளோக் 751 ஈசூன் ஸ்திரீட் 72ல் இருக்கும் வாகன நிறுத்துமிடத்திலிருந்து கார் திருடப்பட்ட தகவல், திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) காலை 8.45 மணியளவில் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவான காட்சிகளைப் பயன்படுத்தி, திருட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவரை அதிகாரிகள் அடையாளம் கண்டு தகவல் அளிக்கப்பட்ட அன்றே கைது செய்ததாகக் காவல்துறை கூறியது.
திருடப்பட்டதாகச் சொல்லப்பட்ட கார் மீட்கப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் திருட்டில் ஈடுபட்ட நபருக்கு வேறு சில மோட்டர்சைக்கிள் திருட்டு வழக்குகளில் தொடர்ப்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவதாகவும் அது சொன்னது.
வாகனத்தைத் திருடியதாக அவர்மீது நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 28ஆம் தேதி குற்றம் சாட்டப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

