பொங்கோலில் வசிக்கும் 66 வயது சார்ல்ஸ் யீ, மின்கலன் வாங்குவதற்காகப் 10 நிமிட நடைப்பயண தூரத்தில் உள்ள கடைக்குச் செல்ல வேண்டியிருந்தது.
ஆனால், தற்போது அவரின் புளோக்குக் கீழே நிறுவப்பட்டுள்ள தானியக்க இயந்திரத்தில் அவற்றை அவர் வாங்கிக் கொள்கிறார்.
பொங்கோலில் உள்ள எட்ஜ்ஃபீல்ட் பிளேன்ஸ் புளோக் 185க்குக் கீழே அமைக்கப்பட்டுள்ள தானியக்க இயந்திரம், பொங்கோல் ஷோர் பகுதியில் விற்பனை நடுவங்கள் எனக் கண்டறியப்பட்ட 12 இடங்களில் அண்மையில் நிறுவப்பட்ட 63 இயந்திரங்களில் ஒன்றாகும்.
இவை, அப்பகுதி மக்களுக்குத் தேவையான அன்றாட அத்தியாவசியப் பொருள்களையும் உணவையும் வழங்குகின்றன.
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7), அப்பகுதியில் நடந்த கிறிஸ்துமஸ் விருந்தில் கலந்துகொண்ட பொங்கோல் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இயோ வான் லிங் அதிகாரபூர்வமாக இவற்றைத் தொடங்கிவைத்தார்.
“பொருள்களை வாங்குவதற்காக மக்கள் இனி நீண்ட தூரம் நடக்கவேண்டியதில்லை. ஜப்பானைப் போன்று பொரும்பாலான பொருள்களை இனி தானியக்க இயந்திரத்திலேயே அவர்கள் வாங்கலாம்,” எனத் திரு இயோ கூறினார்.
ஆறு மாதங்களுக்கு முன்பு சோதனையோட்டமாக அப்பகுதியில் சில தானியக்க இயந்திரங்கள் நிறுவப்பட்டன.

