தாய்மொழி ஊடகங்கள் எஸ்பிஎச் மீடியா குழுமத்தைப் பெருமையடைய வைத்துள்ளதாகவும் அந்த ஊடகங்களுக்கு அதிகபட்ச ஆதரவு வழங்கப்படுவதாகவும் நிறுவனத்தின் தலைவர் கோ பூன் வான் கூறியுள்ளார்.
அப்பொறுப்பிலிருந்து தாம் விலகவிருப்பதாகப் புதன்கிழமை (செப்டம்பர் 9) திரு கோ அறிவித்தார்.
“தாய்மொழி ஊடகங்கள் நம்மைப் பெருமையடையச் செய்துள்ளன. அவை தங்களது சமூகங்களை நன்கு புரிந்து வைத்துள்ளன,” என்று தமது ஓய்வுபெறும் முடிவையும் நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதையையும் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திரு கோ கூறினார்.
மேலும், “ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திகளைத் தொழில்நுட்பத்தின் மூலம் தாய்மொழிகளில் மொழிபெயர்க்க முடிந்தாலும் அவை வாசகர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யா. அதனால்தான் தாய்மொழிச் செய்திப் பிரிவுகளுக்கு எங்களால் முடிந்த அதிகபட்ச ஆதரவை வழங்கி வருகிறோம். இது தொடர்ந்து நடைபெறும் ஒரு பணியாகும்,” என்று சொன்னார்.
திரு கோவின் விலகலை அடுத்து தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான சான் யெங் கிட் புதிய தலைவராகப் பொறுப்பேற்பார். இந்த மாற்றம் ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டு அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும்.
ஊடகத் துறையின் மாற்றங்கள் குறித்துப் பேசிய திரு கோ, விளம்பரங்கள் மூலம் செய்திப் பிரிவுகளுக்கு நிதி திரட்டும் முந்தைய வணிக முறை இப்போது தகர்த்தெறியப்பட்டுள்ளது என்றார்.
பலரது கைகளிலும் திறன்பேசிகள் இருக்கும் இன்றைய சூழலில் வாசகர்களின் கவனத்தை ஈர்ப்பது கடினமாக உள்ளது. இருப்பினும் புதுமைகளைப் புகுத்தி மின்னிலக்க, சமூக ஊடக உள்ளடக்கங்களை உருவாக்கவும் ஆக்கபூர்வமான செயற்கை நுண்ணறிவுப் பங்காளிகளுடன் இணைந்து எஸ்பிஎச் மீடியா பணியாற்றவும் இது வழிவகுத்துள்ளது என்று திரு கோ விளக்கினார்.
திரு கோ, 2021ல் தாம் தலைவராகப் பதவியேற்றபோது எஸ்பிஎச் மீடியா குழுமத்திற்கு மூன்று முன்னுரிமைகள் இருந்தன என்றார். ஃபேஸ்புக், கூகல் போன்ற தளங்களிடமிருந்து விளம்பர வருவாய்க்கு எழுந்த கடுமையான போட்டியை எதிர்கொள்வது; மின்னிலக்கத் தயாரிப்புகளை மேம்படுத்துவது, இளைய தலைமுறை வாசகர்களை அதிகரிப்பது ஆகியவை அவை.
இவை அனைத்தும் சாத்தியப்பட மின்னிலக்க ஊடகம், தொழில்நுட்பத் திறன்கள் இரண்டிலும் மேம்பாடும் அதிகமான புதிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஊடகங்களின் கலாசார மாற்றமும் தேவைப்பட்டன. நிதி வளமும் புது நிதி ஆதாரங்களும் தேவைப்பட்ட அந்நேரம், நிறுவனத்திற்குள் மிகுந்த கவலையும் பதற்றமும் நிறைந்த கடினமான காலம் என்பதைத் திரு கோ நினைவுகூர்ந்தார்.
“அரசாங்கத்தின் ஆதரவோடு முக்கியத் திறன் மேம்பாட்டில் நாம் ஒரு நியாயமான ஏற்பாட்டை உருவாக்கியுள்ளோம்,” என்றார் அவர். “இந்த ஆதரவைப் பெற நாம் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. அதே வேளையில் சமுதாயத்தின் ஆதரவைப் பெறவும் நாம் முயன்றோம்,” என்று கூறிய அவர் குறிப்பாகத் தாய்மொழிக் கல்வியைச் சுட்டினார்.
அமரர் லீ குவான் யூவால் ஈர்க்கப்பட்ட ஒரு பழைய பாணி அரசியல்வாதியாகத் தம்மை அடையாளம் காணும் திரு கோ, உண்மைகள், தர்க்கரீதியான பகுப்பாய்வு, பகுத்தறிவு ஆகியவற்றின் மூலம் மக்களை ஒருங்கிணைக்கும் முக்கியக் கொள்கை பொது ஊடகங்களுக்கு இருப்பதாக நம்புகிறார்.
“திறமையான செய்தியாளர்களைக் கொண்டு செய்திகளைச் சேகரித்து, உண்மைகளை ஆராய்ந்து, உள்ளடக்கங்களை ஈர்க்கும் வகையில் செய்திகளைச் சொல்வது எளிதான காரியமன்று,” என்றார் திரு கோ.
“சிங்கப்பூரின் கண்ணோட்டங்களைப் புரிந்துகொண்டு அவற்றைச் சரியாக வெளிப்படுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு எவ்வளவு திறமையாக இருந்தாலும் இந்தப் பணிகளை வெளிநாட்டுச் செய்தியாளர்களிடமோ ஏஐ-யிடமோ முழுமையாக ஒப்படைத்துவிட முடியாது,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

