நோன்புப் பெருநாளுக்கிடையே மியன்மார், காஸா மக்களை நாம் மறக்கவில்லை: மசகோஸ்

நோன்புப் பெருநாளுக்கிடையே மியன்மார், காஸா மக்களை நாம் மறக்கவில்லை: மசகோஸ்

2 mins read
4e966255-2cef-4b85-a057-66ac06ba045a
புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள அல்-இமான் பள்ளிவாசலில் மார்ச் 31ஆம் தேதி நோன்புப் பெருநாள் தொழுகையின்போது, வழிபாட்டாளர்களைச் சந்தித்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி (நடுவில்). - படம்: பெரித்தா ஹரியான்

நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், காஸா போரில் சிக்கித் தவிப்போர், மியன்மார் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோர் ஆகியோரை சிங்கப்பூர் சமூகம் மறந்துவிடவில்லை என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறியுள்ளார்.

திங்கட்கிழமை (மார்ச் 31) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மசகோஸ், காஸா மக்களுக்கு மனிதநேய உதவி வழங்குவதற்காக கடந்த ஒரு மாதத்தில் உள்ளூர் அறநிறுவனமான ரஹ்மத்தான் லில் ஆலமின் $1 மில்லியனுக்கும் அதிகமான தொகையைத் திரட்டியதாக விளக்கினார்.

இந்த நிதி அவர்களுக்கு உணவு, மருத்துவப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்கள் ஆகியவற்றை வழங்க உதவும் என்று குறிப்பிட்டார்.

நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களுக்கு இடையே நம்மைச் சுற்றி சிரமத்தில் இருப்போரையும் அண்மைய பேரிடரில் சிக்கித் தவிக்கும் மியன்மார் நாட்டு மக்களைப் பற்றியும் நாம் மறக்காமல் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார் முஸ்லிம் விவகாரங்களுக்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சருமான திரு மசகோஸ்.

“பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் தாராள மனப்பான்மையுடன் உதவி செய்து அவர்களுடைய சிரமங்களுக்கு இடையே நம்பிக்கை ஒளியை என்றென்றும் ஏற்றுவோமாக,” என்று திரு மசகோஸ் தெரிவித்தார்.

தொழுகைக்குப் பிறகு, சிங்கப்பூரில் உள்ள பள்ளிவாசல்களின் ஊழியர்களுக்கும் தொண்டூழியர்களுக்கும் திரு மசகோஸ் நன்றி தெரிவித்தார். பல இன, பல கலாசார சமூகத்தில் ரமலான் நோன்பு மாதத்தில் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் வழிபாட்டை மேற்கொள்ள அவர்கள் உதவியுள்ளனர் என்று அவர் கூறினார்.

நோன்பு மாதம் மார்ச் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 31ஆம் தேதி நோன்புப் பெருநாள் அன்று காலையில் முடிந்தது.

இதற்கிடையே, பிரேடல் ரோட்டில் உள்ள முஹாஜிரின் பள்ளிவாசலில் ரமலான் மாதத்தின் முடிவைக் கொண்டாடும் மக்களும் அங்கு சென்றனர். அங்கு பிஷான்-தோ பாயோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சக்தியாண்டி சுபாட், அடித்தள தலைவர்கள், தொண்டூழியர்களுடன் சேர்ந்து சுமார் 1,200 கேக்குகளை வழங்கினார்.

குறிப்புச் சொற்கள்