இணையத் துன்புறுத்தலுக்கு ஆளாவோர் திங்கட்கிழமை (ஜூன் 29) முதல் உதவிக்கு இணையவழிப் பாதுகாப்பு ஆணையத்தை (ஓஎஸ்சி) நாடலாம்.
அந்த ஆணையம் திங்கட்கிழமை செயல்பாட்டுக்கு வந்தது.
இணையவழிப் பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்துக்கு ஆதரவளிக்க இணையவழிப் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. ஓஸ்ரா எனப்படும் இணையவழிப் பாதுகாப்பு (உதவி, பொறுப்பேற்பு) சட்டம் 2025ன்கீழ் ஆணையம் அமைக்கப்பட்டது.
சென்ற ஆண்டு மசோதா தாக்கல்
அந்தச் சட்ட மசோதா சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்தச் சட்டத்தின்கீழ் அபாயம் விளைவிக்கக்கூடிய பதிவுகளை அகற்றுமாறு சமூக ஊடகத் தளங்களுக்கும் செயலிகளுக்கும் உத்தரவிட முடியும்.
இணையத்தில் அபாயம் விளைவிக்கக்கூடிய 13 அம்சங்களை இணையவழிப் பாதுகாப்பு ஆணையம் கையாளவிருக்கிறது. ஆனால், ஆணையம் முதலில் ஐந்து அம்சங்களைக் கையாளும். அதற்குப் பிறகு எஞ்சிய எட்டு அம்சங்கள் கையாளப்படும்.
ஐந்து அம்சங்கள்
அந்தரங்கப் படங்களைக் கொண்டு தவறாக நடந்துகொள்ளுதல் (intimate image abuse), படங்களின் மூலம் சிறார் துன்புறுத்தப்படுதல், தனிப்பட்ட தகவல்களைத் தவறாகப் பயன்படுத்துதல், இணையத் துன்புறுத்தல், இணையத்தில் பின்தொடர்தல் ஆகியவை அந்த ஐந்து அம்சங்களாகும். அவற்றில் முதல் மூன்று அம்சங்களின்கீழ் துன்புறுத்தலுக்கு ஆளாவோர் இணையவழிப் பாதுகாப்பு ஆணையத்திடம் அதன் இணையத்தளம் வாயிலாகப் புகாரளிக்கலாம்.
அதேவேளை, இணையத் துன்புறுத்தல் அல்லது இணையப் பின்தொடர்தலுக்கு ஆளாவோர் அந்தந்த தளத்திடம் முதலில் புகாரளிக்கவேண்டும். அந்தத் தளங்கள் 24 மணிநேரத்துக்குள் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால்தான் அதன் பிறகு இணையவழிப் பாதுகாப்பு ஆணையத்திடம் புகாரளிக்கலாம்.
சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர் ஆகியோர் மட்டும்தான் இப்புகார்களை அளிக்கலாம். 18 வயதுக்கு உட்பட்டோர் அவ்வாறு செய்ய தங்களின் பெற்றோர் அல்லது தங்களைக் கவனித்துக்கொள்ளும் பெரியவர்களிடம் உதவி கேட்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இணையப் பயன்பாடு பெரிய அளவில் இருக்கும் நிலையில் இணைய அச்சுறுத்தல்களைக் கையாள உதவும் முயற்சிதான் இணையவழிப் பாதுகாப்பு ஆணையம் என்று அதன் தலைவர் ஃபிரான்சிஸ் இங் கடந்த புதன்கிழமை (ஜூன் 24) செய்தியாளர்களிடம் கூறினார்.

