உள்ளூர் இணையச் சேவை நிறுவனமான வியூகுவெஸ்ட் (ViewQwest) சிங்கப்பூரின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை அலுவலகத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் சிலர் ஒருவார காலத்திற்கும் மேல் இணையச் சேவையில் தடங்கல் ஏற்பட்டதாகத் தெரிவித்த புகார்களைத் தொடர்ந்து நடந்ததை அறிய விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது.
சேவைத் தடங்கலைக் கடுமையாகக் கருதுவதாக தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
வியூகுவெஸ்ட் சேவையில் தடங்கல் ஏற்பட்டதாக முதன்முதலில் ஏப்ரல் 29ஆம் தேதி புகார் தெரிவிக்கப்பட்டது. சேவைத் தடங்கல் நிகழ்ந்தது எவ்வாறு என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.
“வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் குறைகளை செவிமடுக்குமாறும் இன்னும் இணையத்தொடர்பு கிடைக்காமல் சிரமப்படுவோருக்கு விரைந்து உதவி செய்யுமாறும் வியூகுவெஸ்ட் நிறுவனத்திற்கு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம்,” என்று ஆணையத்தின் பேச்சாளர் புதன்கிழமை (மே 7) கூறினார்.
இணையக் கட்டமைப்பில் பிரச்சினை ஏற்பட்டு உள்ளதாக ஏப்ரல் 29ஆம் தேதி ஃபேஸ்புக் வாயிலாகத் தனது வாடிக்கையாளர்களுக்கு வியூகுவெஸ்ட் தெரிவித்து இருந்தது.
அந்தப் பிரச்சினைக்கு வன்பொருள் ஒன்றின் கோளாறு காரணம் என்றும் அதனால் இணையச் சேவை விநியோகத்திற்கான செர்வரில் பாதிப்பு ஏற்பட்டது என்றும் ‘வியூகுவெஸ்ட்’ பேச்சாளர் ஒருவர் புதன்கிழமை (மே 7) கூறினார்.
அந்த பாதிப்பு சில வாடிக்கையாளர்களின் இணையத் தொடர்பில் சிக்கலை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது இணையத் தொடர்புப் பிரச்சினை சரிசெய்யப்பட்டுவிட்டதாகக் கூறிய அந்தப் பேச்சாளர், இனியும் இதுபோன்ற சேவைத் தடங்கல் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய தமது நிறுவனம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும், அவரவரிடம் இருக்கும் சாதனத்தைப் பொறுத்தும் கட்டமைப்பு ஏற்பாடுகளைப் பொறுத்தும் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு இணையத் தொடர்பு சிக்கல் ஏற்படக்கூடும் என்றும் அதுபோன்றவர்களைத் தொடர்புகொண்டு சிக்கலைத் தீர்க்க உதவிக்குழுக்கள் தயார்நிலையில் இருப்பதாகவும் வியூகுவெஸ்ட் பேச்சாளர் கூறினார்.
சேவைத் தடங்கலால் பாதிக்கப்பட்டோர் எத்தனை பேர் என்பதைத் தெரிவிக்க மறுத்த அவர், வாடிக்கையாளர் தளத்தில் உள்ளோரில் 10 விழுக்காட்டுக்கும் குறைவானர்கள் உதவி நாடியதாகக் குறிப்பிட்டார்.

