இடமாறுகிறது விக்னேஷ் பால்பண்ணை

1 mins read
7f359810-1326-418d-889c-4939ba1766be
சிங்கப்பூரின் கடைசி மாட்டுப் பண்ணையாக விளங்கும் விக்னேஷ் மாட்டுப் பண்ணை 20 ஆண்டுகளுக்கும் மேலாக தற்போதைய இடத்தில் செயல்பட்டு வருகிறது. - படம்: தமிழ் முரசு

லிம் சூ காங் லேன் 8ல் அமைந்துள்ள விக்னேஷ் பால் பண்ணை வரும் செப்டம்பர் மாதம் லேன் 3க்கு இடமாறவிருக்கிறது.

சிங்கப்பூரின் கடைசி மாட்டுப் பண்ணையாக விளங்கும் விக்னேஷ் மாட்டுப் பண்ணை 20 ஆண்டுகளுக்கும் மேலாக தற்போதைய இடத்தில் செயல்பட்டு வருகிறது. அதன் குத்தகைக் காலம் முடிவடைந்ததால் இந்த மாற்றம் இடம்பெறுகிறது.

பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கும் விதமாக எந்த மாற்றமும் இன்றி பண்ணை தொடர்ந்து புதிய இடத்தில் சேவையாற்றும்.

கிட்டத்தட்ட 100 கால்நடைகள் கனரக வாகனங்கள் மூலம் புதிய இடத்திற்குக் கொண்டுசெல்லப்படும்.

புதிய பண்ணை இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும். ஒப்பீட்டளவில், அது தற்போதைய பண்ணையைவிடச் சிறியது.

தற்போதைய பண்ணை ஏழு ஏக்கர் பரப்பளவிலானது. வாடகையில் எந்த மாற்றமும் இல்லை எனக் கூறப்படுகிறது.

வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) ஏறத்தாழ ஏழு கால்நடைகள் பொங்கல் கொண்டாட்டங்களுக்காக லிட்டில் இந்தியாவைச் சென்றடையும்.

இந்நிலையில், இவ்வாண்டு பொங்கல் திருநாள் கொண்டாட்டம் சிறப்புமிக்கதாக இருக்கும் என்று தெரிவித்தார் பண்ணையை வழிநடத்தும் விக்னேஷ் சுப்ரமணியம், 27.

“எங்களது தற்போதைய பண்ணையில் கடைசி மாட்டுப் பொங்கல் இதுவே,” என்று சொன்னார் அவர்.

இடமாற்றத்துக்குப் பின்னர் பள்ளி மாணவர்கள் வருகை, பொது வருகை போன்ற நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தவும் பண்ணை திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்