செம்பவாங் குழுத்தொகுதி மசெக அணியில் விக்ரம் நாயர்

2 mins read
e197543c-40cd-49ac-840a-15150aa2197f
செம்பவாங் குழுத்தொகுதிக்கான மசெக அணியில் விக்ரம் நாயர் (வலது) இடம்பெறுகிறார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

இவ்வாண்டுப் பொதுத் தேர்தலில் செம்பவாங் குழுத்தொகுதியில் போட்டியிடவுள்ள மக்கள் செயல் கட்சி (மசெக) அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வரும் விக்ரம் நாயர் இம்முறையும் அக்குழுத்தொகுதியில் போட்டியிடவுள்ள மசெக அணியில் இடம்பெறுவார். சுகாதார அமைச்சரும் அணிக்கு தலைமை ஏற்பவருமான திரு ஓங் யி காங் ஃபேஸ்புக்கில் இதனை அறிவித்தார்.

திரு ஓங், தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திங்கட்கிழமை (ஏப்ரல் 21) காணொளிவழி அறிவித்துள்ளார். ‘ஐந்து தனிநபர்கள், ஒரு குழு, அனைவருக்குமான செம்பவாங்’ (5 Individuals, 1 team, a Sembawang for Everyone) என்ற கருப்பொருளுடன் அந்தக் காணொளி வெளியிடப்படப்பட்டுள்ளது. எனினும், காணொளியில் இடம்பெறும் அணிதான் செம்பவாங்கில் போட்டியிடும் என்று திரு ஓங் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

மரியாம் ஜாஃபர், புதுமுகங்கள் இங் ஸி ‌ஷுவான், கேப்ரியல் லாம் ஆகியோரும் செம்பவாங் குழுத்தொகுதிக்கான மசெக அணியில் இடம்பெறுகின்றனர்.

‌இடம் மாற்றுவதற்கான சேவைகளை வழங்கும் ஷாலோம் இன்டர்னே‌ஷனல் மூவர்ஸ் (Shalom International Movers) நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியான திரு லாம், மின்கலன் நிறுவனமான பவர்மார்க் பேட்டரி அண்ட் ஹார்ட்வேரின் (Powermark Battery and Hardware) இயக்குநரான திரு இங் இருவரும் செம்பவாங் குழுத்தொகுதியில் களமிறக்கப்படக்கூடிய வேட்பாளர்கள் என்று திரு ஓங் கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்தார்.

திரு ஓங்கின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளியில் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் வீ கியாக் இடம்பெறவில்லை. தொகுதி நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஓங், டாக்டர் லிம்மைக் கெளரவித்தார். நான்கு தவணைக்காலங்கள் நடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்துள்ள டாக்டர் லிம் போட்டியிடமாட்டார் என்று திரு ஓங் வெளிப்படையாகக் கூறவில்லை.

தமது இடத்தை எடுக்கக்கூடியவருக்கு ஆதரவளிக்குமாறு டாக்டர் லிம், ஃபேஸ்புக்கில் இம்மாதம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போ லி சான், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செம்பவாங் வெஸ்ட் தனித் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரும் காணொளியில் இடம்பெறவில்லை.

குறிப்புச் சொற்கள்