கட்டுமானத் துறையில் சாதிக்கும் விமலதுளசி

கட்டுமானத் துறையில் சாதிக்கும் விமலதுளசி

4 mins read
3c354b73-289e-483e-ad89-74fd2e6a6158
ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகளைக் கண்காணித்த திருவாட்டி விமலதுளசி வெற்றிவேல். - படம்: நிலப்போக்குவரத்து ஆணையம்

கட்டுமானத்தளம் அசுத்தமானது என்றும் அதில் பணியாற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்றும் கருதப்பட்ட காலம் மலையேறிவிட்டது. கட்டுமானத் துறையில் ஏற்பட்ட மாற்றம் நிலப்போக்குவரத்து ஆணையத்தின் முதன்மைத் திட்ட மேலாளரான விமலதுளசி வெற்றிவேலுக்கு வெற்றியையே தந்துள்ளது.

நாற்பது வயதான, இரு பிள்ளைகளின் தாயான அவரைப் பார்த்தவுடன் அவர் ஒரு திறமையான நிபுணர் என்பது புரிந்துவிடும். வேலையில் அந்தப் பெண்ணுக்கு இருக்கும் திறமையும் நம்பிக்கையும் குறுக்குத்தீவு எம்ஆர்டி வழித்தடத்தில் ரயில் நிலையங்களைக் கட்டுவது போன்ற, அவர் நிர்வகிக்கும் உள்கட்டமைப்புத் திட்டங்களின் அளவுக்கு ஈடாக அமைகின்றன.

குறுக்குத்தீவு எம்ஆர்டி வழித்தடம் முழுமையாக நிலத்தடிக்குள் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்டிருக்கும் என நிலப்போக்குவரத்து ஆணையத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிலையம் செயல்பாட்டுக்கு வருவதை உறுதிசெய்ய ஒப்பந்ததாரர்கள், திட்ட ஆலோசகர்கள், சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்களுடன் தொடர்புகொள்வது திருவாட்டி விமலாவின் பணியாகும்.

ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த கட்டுமானத் துறையில் பணிபுரியும்போது, ​​பாலினம் சார்ந்த சவால்களை எப்போதாவது எதிர்கொண்டதுண்டா என்று கேட்டபோது, “அப்படி எதுவுமில்லை. உண்மையைச் சொல்லப்போனால், எனக்கு நல்ல மரியாதை கிடைக்கிறது,” என்றார் அவர்.

மரியாதை என்பது இருதரப்பிலும் நிகழவேண்டியது என்பதைப் புரிந்துகொண்டிருக்கும் அவர், “எனக்கு மரியாதை தரும்போது நானும் அவர்களை மதிக்கிறேன்.

கட்டுமானத்துறை ஊழியர்களில் கணிசமானோர் இந்தியா, பங்ளாதேஷ் நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம், “எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் குடும்பத்தினர் நலமாக இருக்கிறார்களா?” என்று கேட்பேன். சில வேளைகளில் தமிழில் நான் பேசும்போது இந்திய ஊழியர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்,” என்றார் திருவாட்டி விமலா.

ஊழியர்களுடன் தனிப்பட்ட முறையிலும் நிறுவன அளவிலும் நல்லுறவை வளர்த்துக் கொள்ளும் அவர், ஓய்வெடுப்பதற்குப் போதுமான இடவசதி உள்ளதா குடிநீர், முறையான கழிப்பறை வசதிகள் கிடைக்கின்றனவா என்று அவர்களை விசாரிப்பதாகக் கூறுகிறார்.

“நான் இவ்வாறு கேட்பதால் தங்கள் மீது உண்மையான அக்கறை கொண்டிருப்பதை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். அது அவர்களின் வேலையில் பிரதிபலிக்கிறது,” என்றார் அவர்.

கட்டுமானத் துறைக்குள் நுழைந்தது திருவாட்டி விமலா திட்டமிடாத ஒரு பயணமாகும்.

“காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்பது எனது சிறு வயது விருப்பம்,” என்றார் அவர் புன்னகை முகத்துடன்.

வழக்கநிலை, சாதாரண நிலைத் தேர்வுகளை எழுதிய பிறகு அந்த லட்சியம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. பலதுறைத் தொழில்நுட்பப் படிப்புக்கு தகுதிபெறத் தேவையான புள்ளிகளைப் பெற்ற பின்னர், 2000களின் முற்பகுதியில் தகவல் தொழில்நுட்பத் துறை நல்ல வளர்ச்சி கண்டிருந்ததால் அதில் படிக்க விரும்பினார்.

ஆயினும் அவரது உறவினர் அந்தக் கண்ணோட்டத்தை மாற்றினார். நீ ஆன் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரியில், போட்டி அதிகமில்லாத கட்டுமானம் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் படிக்க அவர் தூண்டினார்.

அதனைக் கருத்தில் கொண்டு நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கட்டடத்துறைப் பொறியியல் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்த 2008ஆம் ஆண்டுதான் உலகளாவிய பொருளியல் நெருக்கடி ஏற்பட்டது என திருவாட்டி விமலா நினைவுகூர்ந்தார்.

அதனால், தமது எதிர்காலம் பற்றிக் கவலைப்பட்ட அவர், தாம் படித்த அதே நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வேலைக் கண்காட்சிக்குச் சென்றார். அங்கு நிலப் போக்குவரத்து ஆணையம் அமைத்திருந்த அரங்கிற்குச் சென்றார்.

“அங்கு இருந்தவர்கள், சிங்கப்பூரில் அடுத்து வரவிருக்கும் எம்ஆர்டி வழித்தடங்கள் அடங்கிய வரைபடத்தை என்னிடம் காட்டினார்கள். எம்ஆர்டி கட்டுமானத் திட்ட மேலாண்மை அம்சம் என்னை மிகவும் கவர்ந்ததால், வேலைக்காட்சி முடிந்ததும் எனது விண்ணப்பத்தை ஆணையத்துக்கு அனுப்பினேன்,” என்று விவரித்தார் விமலா.

அதன் பின்னர் நடந்தது எல்லாம் வரலாறு.

வேலையில் சேர்ந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு, மூத்த திட்ட மேலாளராக வேலை செய்துகொண்டிருந்த திருவாட்டி விமலாவுக்கு சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் உள்கட்டமைப்பு மேலாண்மை, மின்னிலக்கமயமாக்கல் துறையில் முதுகலைப் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பை ஆணையம் வழங்கியது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.

26 வயதான சிவில் திட்டப் பொறியாளர் திருமதி கோ யி சுவான், 37 வயதான நிர்வாகப் பொறியாளர் திருமதி வூ ஜுன்லான் ஆகியோர் ஆணையத்தில் திருமதி விமலாவின் தற்போதைய குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

“ஒரு குழுவின் தலைவராக இருக்க, உணர்ச்சிமேலிட்டவராகவோ அல்லது பிடிவாத குணம் கொண்டவராகவோ இருக்க வேண்டும் என்ற தவறான எண்ணம் மக்களிடையே உள்ளது.

“ஆனால், இந்த குணாதிசயங்கள் ஆண்களிடமே பொதுவாகக் காணப்படுகின்றன,” என்ற திருவாட்டி கோ, “ஒரு நல்ல தலைவராக இருப்பதற்குத் தேவையான அனைத்து குணங்களும் பெண்களிடம் இருக்க முடியாது என்று பொருளல்ல. ஏனென்றால் நான் அதை விமலாவிடம் காண்கிறேன். அவர் உறுதியானவர்; அதே சமயம் இரக்கக் குணம் கொண்டவர். மேலும், எங்கள் வளர்ச்சிக்கும் உதவுகிறார்,” என்றும் கூறினார்.

அதேபோல், திருமதி வூ தனது முந்தைய பணியிடங்களில் மிகவும் ஒதுங்கியே இருந்ததை ஒப்புக்கொண்டார்.

“விமலாவின்கீழ், என்னால் இன்னும் வெளிப்படையாக இருக்கவும், உண்மையாகவே நானாக இருக்கவும் முடிகிறது என்பதை உணர்கிறேன்,” என்றார் அவர்.

கட்டுமானத் துறையில் உள்ள மேலும் பல பெண்கள் இதுபோன்ற வெற்றிப்பாதையில் நடைபோடுவதை உறுதிசெய்ய, திருவாட்டி விமலாவும் அத்துறையைச் சேர்ந்த மூன்று பெண்களும் ஒன்றிணைந்து 2019ஆம் ஆண்டு சிங்கப்பூர் கட்டுமானப் பெண்கள் சங்கத்தை (AWiCS) நிறுவினர்.

‘தப்லா’ இதழில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்
குறிப்புச் சொற்கள்