சொத்து முகவர் மன்றத்தின் தலைவராகத் திரு வின்சென்ட் ஹூங் செங் லெய், நவம்பர் 1ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ளார்.
தற்போது மன்றத்தின் துணைத் தலைவராக உள்ள இவர், அக்டோபர் 31ஆம் தேதி பதவி ஓய்வுபெறும் தற்போதைய தலைவர் குவெக் சீ டியட்டிடமிருந்து அந்தப் பொறுப்பை ஏற்பார். தேசிய வளர்ச்சி அமைச்சும் சொத்து முகவர் மன்றமும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) வெளியிட்ட கூட்டறிக்கையில் இதனைத் தெரிவித்தன.
தேசிய வளர்ச்சி அமைச்சின்கீழ் செயல்படும் அம்மன்றம், சொத்து முகவைத் துறையின் தொழில்முறை நிபுணத்துவத்தை உயர்த்துவதையும் பயனீட்டாளர் நலன்களைப் பாதுகாப்பதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் ஹூ எங் ஜெக், மன்றத்தின் புதிய துணைத் தலைவராகப் பொறுப்பேற்பார். அத்துடன், மன்றத்திற்கு ஐந்து புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் ஏழு உறுப்பினர்கள் மீண்டும் நியமிக்கப்படவுள்ள வேளையில், மூவர் பதவி விலகுகின்றனர்.
ஓய்வு பெறும் தலைவர் குவெக், இத்துறையின் உருமாற்றத் திட்டத்தை உருவாக்கி வழிநடத்தினார். சொத்து முகவர்கள் தங்கள் பதிவைப் புதுப்பிப்பதற்கான விதிமுறைகளை அமல்படுத்துவதையும் அவர் முன்னின்று கண்காணித்தார்.
புதிய தலைவராகப் பொறுப்பேற்கவிருக்கும் திரு ஹூங், உச்ச நீதிமன்றப் பதிவாளர், சிங்கப்பூர் நில ஆணையத்தின் தலைமைச் சட்ட ஆலோசனை அதிகாரி, அரசு நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்ததுடன் பொதுச் சேவையில் பரந்த அனுபவம் கொண்டவர்.
