பருத்தி விற்பனை: சிங்கப்பூர் நிறுவனத்திற்கு $4.2 மில்லியன் அபராதம்

பருத்தி விற்பனை: சிங்கப்பூர் நிறுவனத்திற்கு $4.2 மில்லியன் அபராதம்

2 mins read
c5ca20e3-3dda-4256-bdd9-574da6565fc8
‘ஒலாம்’ போன்ற நிறுவனங்கள் பருத்தி விற்பனை குறித்து அமெரிக்க வேளாண் துறைக்குத் தெரிவிக்க வேண்டும். - படம்: ஒலாம்

நியூயார்க்: பருத்தி விற்பனை தொடர்பில் தகவல்களைத் தாமதமாகத் தெரிவித்ததற்காக சிங்கப்பூரில் தலைமையகம் கொண்டுள்ள ‘ஒலாம்’ குழுமத்திற்கு அமெரிக்க டாலர் 3.25 மில்லியன் (S$4.2 மி.) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இவ்வாறு தாமதமாகத் தெரிவித்தது, பருத்தி விலை மீது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நிறுவனம் அபராதத்தை அமெரிக்க வேளாண் துறையிடமும் (யுஎஸ்டிஏ) சரக்கு முன்பேர வணிக ஆணையத்திடமும் (சிஎஃப்டிசி) செலுத்தும்.

ஆசிய வாடிக்கையாளர் ஒருவரிடம் 2021ஆம் ஆண்டு, ஐந்து பருத்தி விற்பனைகள் குறித்து ஒலாம் தாமதமாகத் தெரிவித்ததாக ‘சிஎஃப்டிசி’ குறிப்பிட்டது. கிட்டத்தட்ட ஐந்து வாரங்கள் கழித்து விற்பனை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் அது அமெரிக்க டாலர் $190 மில்லியன் மதிப்புடைய 375,000 பருத்தி மூட்டைகள் சம்பந்தப்பட்டது என்றும் ஆணையம் அறிந்து வந்தது.

‘ஒலாம்’ போன்ற நிறுவனங்கள் பருத்தி விற்பனை குறித்து ‘யுஎஸ்டிஏ’க்குத் தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் யுஎஸ்டிஏ வாராந்தர, மாதாந்தர ஏற்றுமதி அறிக்கைகளைத் தயார் செய்து வெளியிடும்.

பருத்திக்கான தேவையை அறிந்திட இந்த அறிக்கைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

“தாமதத்தால் பருத்தி விற்பனை குறித்து தவறான, துல்லியமற்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தேவை அறிதல், வழங்குதல் ஆகியவற்றுக்கு முக்கியக் குறியீடாகத் திகழும் அறிக்கை, நம்பகத்தன்மை இழந்தது. அத்துடன் சரக்குகளின் விலையை நிர்ணயிப்பதிலும் உள்ள நேர்மை மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று சிஎஃப்டிசி தெரிவித்தது.

இதற்கிடையே, பெயரிடப்படாத அந்த ஆசிய வாடிக்கையாளர், ‘பருத்தி வாங்கும் ஆகப் பெரிய அனைத்துலக நிறுவனங்களில் ஒன்று’ என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்