வயலின் கலைஞரின் தனியார் வீடு அடமான மோசடி: நால்வர் கைது

வயலின் கலைஞரின் தனியார் வீடு அடமான மோசடி: நால்வர் கைது

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

10 Nov 2026 - 5:52 pm

2 mins read

வயலின் இசைக்கலைஞரின் S$6 மில்லியன் மதிப்புள்ள தனியார் வீட்டை பிணையாக அடமானம் வைக்க மோசடியாக முயற்சி செய்த குற்றம் நான்கு ஆடவர்கள்மீது செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) சுமத்தப்பட்டது.

வயலின் இசை நிபுணரான அந்தக் கலைஞரின் வீடு காத்தோங்கில் உள்ளது. அதனை கடன்பெறும் நோக்கத்துடன் பிணை வைப்பதற்கு அந்த நான்கு ஆடவர்களும் பல வழிகளில் குற்றங்கள் புரிந்தனர்.

அவரது அடையாள அட்டையைப் போலியாகத் தயாரித்து அவரைப்போல் ஆள்மாறாட்டம் செய்தது, போலியான ஆவணங்களை சமர்ப்பித்து அடமானக் கடன்களைப் பெற முயன்றது போன்ற குற்றங்களை அவர்கள் செய்துள்ளனர்.

காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் திரு எல்கார் குவக் சொங் ஹீ தங்கியிருந்த அந்த வீட்டில் இருந்து பல சூழ்நிலைகளில் அந்த ஆடவர்களால் அவர் வெளியில் வேறு இடங்களுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

அந்தச் சமயங்களில் அவரது காத்தோங் இல்லம் திரு எல்காருக்குத் தெரியாமலேயே சொத்து மதிப்பீட்டாளர்களால் பார்வையிடப்பட்டது.

அவரது அனுமதியின்றி வீட்டின் பெயரில் கடன் விண்ணப்பம் செய்யப்பட்டதோடு அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதை அவர் பிறகு அறிந்துகொண்டதும் திரு எல்கார் காவல்துறையில் புகாரளித்தார்.

அன்ட்ரு லீ ஷியன்நெங், 36 வயது, லசாரஸ் சிங் ஃபெய், 27 வயது, எர்நெஸ்ட் ஃபன் சென்ஹாவ், 39 வயது, டெரன்ஸ் டான் ஜுன் மிங் 29 வயது ஆகிய நால்வர்மீதும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆரம்பகட்ட விசாரணையில் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வீட்டை பிணையாகக் கொண்டு அடமானக் கடன் விண்ணப்பம் செய்யப்பட்டது போன்ற விவரங்கள் தெரியவந்ததாக காவல்துறை தெரிவித்தது.

கூடுதல் விசாரணையில் ஓர் ஐந்தாவது நபர் சம்பந்தப்பட்டதும் கண்டறியப்பட்டது. கோசன் நோவா கோர் என்ற நபர் குற்றப்பத்திரிகையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். இரண்டு கடன் வழங்கும் நிறுவனங்களிடம் அவர் அந்த வீட்டை வைத்து அடமானக் கடன் பெற முயன்றுள்ளார். விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்