அறுவைச் சிகிச்சைக்கு முன் பதற்றத்தைத் தணிக்கும் மெய்நிகர் தொழில்நுட்பம்

அறுவைச் சிகிச்சைக்கு முன் பதற்றத்தைத் தணிக்கும் மெய்நிகர் தொழில்நுட்பம்

1 of 2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Oct 2026 - 8:30 pm

2 mins read

கேகே மகளிர், சிறுவர் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்குத் தயாராகும் நோயாளிகளின் முந்தைய பதற்றத்தைக் குறைக்க மெய்நிகர் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தொழில்நுட்பம் நோயாளிகளின் பதற்றத்தை ஏறத்தாழ 30 விழுக்காடு குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மயக்க மருந்தின் கீழ் கர்ப்பப்பையில் உள்ள கட்டியை அகற்றும் அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள 45 வயதான எய்லீன் டான் திட்டமிட்டிருந்தார்.

அறுவைச் சிகிச்சைக்கு முன் அவர் மிகவும் பதற்றமாக இருந்தார். அவருக்கு மெய்நிகர் காணொளிகளைப் பார்க்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனைப் பயன்படுத்திய டான், மின்கலம் தீரும் வரை காணொளியைப் பார்த்ததாகவும், தனது பதற்றம் தணிந்ததாகவும் கூறினார்.

இந்தத் தொழில்நுட்பம் 2025ஆம் ஆண்டு முதல் மருத்துவ நடைமுறையில் சேர்க்கப்பட்டது. ஆண்டுதோறும் ஏறக்குறைய 250 பெண்கள் இதனால் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருப்பை அல்லது கட்டிகள் அகற்றும் மகளிர் மருத்துவ அறுவைச் சிகிச்சைகளுக்கு இது இலவசமாக வழங்கப்படுகிறது.

இனிவரும் காலங்களில், சிறுவர்களுக்கும் வெளிநோயாளிகளுக்கும் இந்த வசதியை விரிவுபடுத்த மருத்துவமனை திட்டமிட்டுள்ளது.

அறுவைச் சிகிச்சைக்கு 1 அல்லது 2 மணி நேரத்திற்கு முன் இந்த வசதி குறித்து நோயாளிகளிடம் விளக்கப்படும். அவர்கள் விரும்பினால், மெய்நிகர்க் கருவியை அணிந்து 5 முதல் 10 நிமிடக் காணொளிகளைக் காணலாம்.

தியான இசையுடன் கூடிய கடற்கரை காட்சி, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய காடு காணொளி, ‘கார்டன்ஸ் பை தி பே’, அறுவை சிகிச்சை அறையின் தோற்றம் என நான்கு காணொளிகள் உள்ளன.

நோயின் தன்மை, வலி குறித்த அச்சம் பதற்றத்தை ஏற்படுத்துகிறது என்று மூத்த ஆலோசகர் ஜேசன் சான் தெரிவித்தார்.

நீண்ட நேரப் பயன்பாடு நன்மையளிக்குமா என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று மூத்த ஆலோசகர் ஸ்ங் பான் லியோங் கூறினார்.

2020 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், இத்தொழில்நுட்பம் நோயாளிகளின் பதற்றத்தைக் கணிசமாகக் குறைப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய மூன்று நாள்கள் வரை பதற்றம் குறைவாகவே இருந்தது. முதல் 24 மணி நேரத்தில் நோயாளிகளின் உடல் அசௌகரியமும் குறைந்தது.

‘சிசேரியன்’ பிரசவம், அவசர அறுவைச் சிகிச்சை, பார்வைக் கோளாறு அல்லது பயண ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இந்த வசதி வழங்கப்படுவதில்லை.

இந்த வாய்ப்பு வழங்கப்பட்டவர்களில் 70 விழுக்காட்டினர் இதனை ஏற்றுக்கொண்டனர். மற்றவர்கள் புத்தகங்கள் படிப்பது, செவிலியர்களுடன் பேசுவது போன்ற மாற்று வழிகளைப் பின்பற்றினர் எனச் செவிலியர் ஓங் சியோக் ஹூன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்