தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயங்கரவாதத்துடன் தொடர்புடையோரின் விசா விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை: அமைச்சு விளக்கம்

1 mins read
06e50558-6c5d-4b2e-82c3-52a86dc4022a
ஈரானியப் பெண்ணின் நீண்டகால விசா பிப்ரவரி 10ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுவிட்டது என்றும் அடுத்த ஏழு நாள்களுக்குள் அவர் சிங்கப்பூரைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பயங்கரவாதத்துடன் தொடர்புடையோர் சார்பில் பயண முகவை ஒன்று சமர்ப்பித்த விசா விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈரானிய - மலேசிய இணையருடன் தொடர்புடைய அந்தப் பயண நிறுவனம், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய வெளிநாட்டவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய ஏதுவாக அவர்கள் சார்பில் விசா விண்ணப்பங்களைச் சமர்ப்பித்ததாகச் சொல்லப்பட்டது.

அவ்விணையர் இருவரும் சிங்கப்பூரிலிருந்து நாடுகடத்தப்படுவர் என்றும் சிங்கப்பூருக்குள் மீண்டும் நுழைய தடை விதிக்கப்படும் என்றும் அமைச்சு கடந்த திங்கட்கிழமை தெரிவித்திருந்தது.

அதுகுறித்து உள்துறை அமைச்சிடம் சிஎன்ஏ ஊடகம் கேட்டதற்கு, 38 வயதான பர்வானே ஹெய்தரிதேகோர்டி என்ற ஈரானியப் பெண்ணின் நீண்டகால விசா பிப்ரவரி 10ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுவிட்டது என்றும் அடுத்த ஏழு நாள்களுக்குள் அவர் சிங்கப்பூரைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் அமைச்சு வியாழக்கிழமை (பிப்ரவரி 13) தெளிவுபடுத்தியது. அந்தப் பயண நிறுவனச் செயல்பாட்டில் அப்பெண்ணுக்குத் தொடர்பிருந்தது.

அவருடைய கணவரான 65 வயது மலேசியர் சூ தியென் லிங் இப்போது சிங்கப்பூரில் இல்லை என்று அமைச்சு கூறியது. சிங்கப்பூர் நிரந்தரவாசியான சூ தடைசெய்யப்பட்ட நிரந்தரவாசியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இருவரில் ஒருவரும் கைதுசெய்யப்படவில்லை என்றும் அவர்கள் பயங்கரவாதம் சார்ந்த மற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இதுவரை நடந்த விசாரணையில் கண்டறியப்படவில்லை என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்