இரண்டாவது சிங்கப்பூர் - இந்திய அமைச்சர்நிலை வட்டமேசைக் கூட்டம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) சிங்கப்பூரில் நடைபெற உள்ளது.
இரு நாடுகளின் அமைச்சர்களும் இருதரப்பு ஒத்துழைப்புக்கான முக்கியத் துறைகள் குறித்து விவாதித்து, இருதரப்பு நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள இந்த உயர்மட்டக் கூட்டம் தளமாக உள்ளது.
இந்த இரண்டாவது கூட்டம், கடந்த 2022 செப்டம்பர் புதுடெல்லியில் நடைபெற்ற முதலாவது வட்டமேசைக் கூட்டத்துக்குப் பிறகு ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்யும்.
மேலும், வளர்ச்சி, ஒத்துழைப்புக்கான புதிய துறைகளும் இக்கூட்டத்தில் அடையாளம் காணப்படும்.
சிங்கப்பூர்க் குழுவிற்கு துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் தலைமை வகிப்பார். வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சரும் இரண்டாம் உள்துறை அமைச்சருமான ஜோசஃபின் டியோ, மனிதவள அமைச்சரும், வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சருமான டாக்டர் டான் சீ லெங், போக்குவரத்து அமைச்சரும் நிதிக்கான இரண்டாம் அமைச்சருமான சீ ஹொங் டாட் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியக் குழுவில், நிதி மற்றும் நிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அமைச்சர்களுக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் விருந்தளிப்பார்.
பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங்கையும் இந்திய அமைச்சர்கள் சந்திப்பர். துணைப் பிரதமர் கான் கிம் யோங் அவர்களுக்கு இரவு விருந்து அளிப்பார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்குமிடையிலான இருதரப்பு உறவு வலுப்படுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இச்சந்திப்பு குறிக்கிறது. இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராய ஆர்வமாக உள்ளன.