உட்லண்ட்ஸ் ‘விஇபி’ தகவல் முகப்புக்கு நேரில் செல்வதற்கு முன்பு பதிவுசெய்வது கட்டாயம்

உட்லண்ட்ஸ் ‘விஇபி’ தகவல் முகப்புக்கு நேரில் செல்வதற்கு முன்பு பதிவுசெய்வது கட்டாயம்

2 mins read
26178d73-5e9b-47e3-99bb-d613c6e39827
கூட்டத்தைக் கட்டுப்படுத்த இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: சாவ்பாவ்

நிலவழி மலேசியாவுக்கு வாகனத்தில் செல்வோர் அந்நாட்டின் வாகன நுழைவு உரிம (விஇபி) முறை குறித்து தகவல் தெரிந்துகொள்ள உட்லண்ட்ஸ் தகவல் முகப்புக்கு நேரில் போவதற்கு முன்பு பதிவுசெய்துகொள்ளவேண்டும்.

186 உட்லண்ட்ஸ் தொழிலியல் பூங்கா E5-ல் இருக்கும் அந்த முகப்புக்கு உதவி நாடி பலர் திரளாக வந்ததால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முகப்பை நடத்தும் சிங்கப்பூர் நிறுவனமான ‘மை விஇபி’யின் தற்காலிக நிர்வாகி இங் போ ஹெங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் இதனைத் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) முதல் உட்லண்ட்ஸ் விஇபி தகவல் முகப்புக்கு நேரில் செல்வதற்கு முன்பு https://www.myvep.com.sg/appointment எனும் இணையத்தளத்தில் முன்கூட்டியே பதிவுசெய்யவேண்டும். பதிவுசெய்யும்போது வாகனமோட்டிகள் தங்கள் பெயர், வாகனப் பதிவு எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களைப் பதிவிடவேண்டும்.

காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேளையைத் தேர்ந்தெடுத்து அவர்கள் விஇபி தகவல் முகப்புக்குப் போகலாம்.

இப்போதைக்கு வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 2) முதல் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டுமே முகப்புக்கு நேரில் பதிவுசெய்துகொள்ளமுடியும்; திங்கட்கிழமையிலிருந்து செப்டம்பர் ஒன்பதாம் தேதி வரை எல்லா பதிவுகளும் முடிந்துவிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

சம்பந்தப்பட்ட ஊழியர்களின் வேலைச் சுமையைக் குறைப்பதற்காகவே உட்லண்ட்ஸ் விஇபி தகவல் முகப்புக்குச் செல்வதற்கான கட்டாயப் பதிவு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது என்று திரு இங் தெரிவித்தார். அப்போதுதான் ஊழியர்களால் விஇபி தொடர்பான ஐயங்களைத் தீர்த்துவைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

விஇபி தகவல் முகப்பில் திரு இங் உட்பட அறுவர் பணியில் இருந்து வருகின்றனர்.

எனினும், ஆகஸ்ட் 19ஆம் தேதி அந்த முகப்பு திறக்கப்பட்டதிலிருந்து அங்கு கூட்டம் அலைமோதுவதால் இரண்டிலிருந்து மூன்று ஊழியர்கள் தங்கள் அலுவலகத்துக்கு வெளியே சிலரைக் கவனிக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்