சிங்கப்பூரின் பல மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு உதவ ஓவியம் போன்ற கலைகளில் பயிற்சிகளை வழங்கிவருகின்றன.
மருந்துகள் மட்டுமன்றி மனநலமும் பேணப்படவேண்டும் என்பதால் மருத்துவமனைகள் அவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.
நாள்பட்ட நோயாளிகள், மன அழுத்தம், அதிர்ச்சி போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் போன்றோருக்குக் கலை சார்ந்த பயிற்சிகள் ஆறுதல் தருகின்றன.
கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து மருத்துவ சிகிச்சை வழங்கும் அமைப்புகள் நோயாளிகளுக்கு இத்தகைய பயிற்சிகளை வழங்கும் விகிதம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
சீரான மனநலத்தை ஊக்குவிக்கும் அதேவேளையில், நோயாளிகளுக்குக் கலைகளில் பயிற்சி வழங்குவோரின் தரத்தையும் தகுதியையும் கருத்தில் கொள்வது அவசியம் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
‘ஆர்ட்ஸ் சைக்கோதெரபி’ என்றழைக்கப்படும் உளவியல் சிகிச்சை, கலைகளைப் பயன்படுத்தி ஒரு நோயாளியை மனோவியல் முறையில் பராமரிப்பதைக் குறிக்கும்.
நோயாளியின் மனநிலையை மேம்படுத்தி, அதிர்ச்சியில் இருந்து மீளும் தன்மையை ஆராய்வதற்கு அந்த வகையான சிகிச்சை உதவும். அத்தகைய சிகிச்சைகள் பயிற்சி பெற்ற, கைதேர்ந்த பயிற்றுநர்களால் வழிநடத்தப்படுவதே சிறந்தது என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
உளவியல் சிகிச்சை, உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் நோயினால் மனோரீதியாக பாதிப்படைந்துள்ள நோயாளிகளின் பராமரிப்பில் ஓர் அங்கமாகவே பயன்படுகிறது. மருந்து, மாத்திரைகளோடு வழங்கப்படும் மனோவியல் சிகிச்சை, நோயாளிகளுக்கு ஒரு மாற்று நிவாரணமாகச் செயல்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மனநலக் கழகத்தில் (IMH) கடந்த 2023ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட உளவியல் சிகிச்சை இதுவரை ஆண்டுதோறும் 20 விழுக்காடு அதிகரித்துவந்துள்ளது.
“யார் வேண்டுமானாலும் தன்னைக் கலைகளின் பயிற்றுநர் என்று கூறிக்கொள்ளலாம். எனவே, இவ்வகையான மனோவியல் சிகிச்சை முறைகளின் தேவை அதிகரிக்கும்போது, அவற்றை வழங்கும் பயிற்றுவிப்பாளர்கள் நன்கு பயிற்சிபெற்றவர்களாக இருப்பதை உறுதிசெய்யவேண்டும்,” என்று கூ டெக் புவாட் மருத்துவமனை-தேசியப் பல்கலைக்கழக குழந்தைகள் உளவியல் மருத்துவப் பிரிவின் தலைவர் லூ ஹுவீ ஹுவீ கூறினார்.

