வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், ஐந்து நாள் அதிகாரபூர்வப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை (மே 24) முதல் சீனா, வடகொரியா, தென்கொரியா ஆகிய மூன்று வட ஆசிய நாடுகளுக்குச் சென்றுள்ளார்.
உலகளாவிய சவால்களுக்கு மத்தியில், வெளிநாட்டுத் தரப்புகளுடன் தொடர்புகளைப் பேணுவதற்காகச் சிங்கப்பூர் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இப்பயணம் அமைந்துள்ளதாக வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பயணத்தின்போது, அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அந்தந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்து, இருதரப்பு உறவுகளை உறுதிப்படுத்துவதுடன், வட்டார மற்றும் அனைத்துலக நிலவரங்கள் குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவுள்ளார்.
சிங்கப்பூருக்கும் வடகொரியாவுக்கும் இடையே 1975ஆம் ஆண்டில் தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்ட பிறகு, சிங்கப்பூர் அமைச்சர் ஒருவர் அங்கு செல்வது இது நான்காவது முறை ஆகும்.
இதற்கு முன்னர் 2008ஆம் ஆண்டில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோவும் பின்னர் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் டிரம்ப்-கிம் உச்சநிலை மாநாட்டிற்கு முன்னதாக அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் அங்கு சென்றிருந்தனர்.
அதன் பிறகு, வடகொரியாவின் 70வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் சிங்கப்பூரின் பிரதிநிதியாக அப்போதைய மூத்த நாடாளுமன்றச் செயலாளர் டாக்டர் டான் வூ மெங் கலந்துகொண்டார்.
இந்தப் பயணத்தில் வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகளும் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுடன் சென்றுள்ளனர்.

