விவியன்: சிங்கப்பூர், ஆசியானின் முக்கியப் பங்காளியாக அமெரிக்கா தொடர்கிறது

2 mins read
bd8e1d0f-0353-4c3f-af60-340517e1fc3e
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் அமைச்சர் விவியன் புதன்கிழமை (மார்ச் 5) முதல்முறையாக தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார். அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்ட திரு ரூபியோவுக்குத் தமது வாழ்த்துகளை அமைச்சர் விவியன் தெரிவித்துக்கொண்டார். - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூர் மற்றும் ஆசியானின் முக்கியப் பங்காளியாக அமெரிக்கா தொடர்கிறது என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் ஆசியானும் இணைந்து செயல்படுவதன் மூலம் இருதரப்புக்கும் பலன்கள் கிடைப்பதாக அவர் கூறினார்.

ஆசியான் நாடுகள் தொடர்ந்து செழுமை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் சிங்கப்பூர் தொடர்ந்து இந்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் என்று டாக்டர் விவியன் தெரிவித்தார்.

ஆசியான் நாடுகளுடன் அமெரிக்கா நீண்டகாலமாக இணைந்து செயல்படுவதை அமைச்சர் விவியன் சுட்டினார்.

இதன் காரணமாக தென்கிழக்காசியாவில் கடந்த பல ஆண்டுகளாக அமைதி, நிலைத்தன்மை, செழுமை நிலவுவதாக அவர் கூறினார்.

தென்கிழக்காசியாவில் ஆக அதிகம் முதலீடு செய்யும் வெளிநாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் வகிப்பதாக அமைச்சர் விவியன் தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கும் ஆசியானுக்கும் இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு 294.6 பில்லியன் (S$392.3 பில்லியன்) என்று ஆசியானின் இணையப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆசியானின் பொருளியல் பேரளவில் வளர்ச்சி கண்டு வருவதாக அமைச்சர் விவியன் கூறினார்.

2030ஆம் ஆண்டுக்குள் உலகின் நான்காவது ஆகப் பெரிய பொருளியலாக ஆசியான் திகழும் சாத்தியம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அமெரிக்க வர்த்தகம், முதலீடு காரணமாக ஆசியானில் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை இருப்பதாகக் குறிப்பிட்ட டாக்டர் விவியன், தென்கிழக்காசிய நாடுகளின் வர்த்தகம், முதலீடு காரணமாக அமெரிக்காவில் 600,000க்கும் அதிகமான வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

பொருளியலை மேம்படுத்த தென்கிழக்காசிய நாடுகளுடன் தொடர்ந்து செயல்பட அமெரிக்கா ஆர்வத்துடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதே சமயம், ஆசியானுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த அது விரும்புவதாக டாக்டர் விவியன் கூறினார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் அமைச்சர் விவியன் புதன்கிழமை (மார்ச் 5) முதல்முறையாக தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார்.

இந்தத் தகவலை வெளியுறவு அமைச்சு வெளியிட்டது.

அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்ட திரு ரூபியோவுக்குத் தமது வாழ்த்துகளை அமைச்சர் விவியன் தெரிவித்துக்கொண்டார்.

இரு அமைச்சர்களும் சிங்கப்பூருக்கு அமெரிக்காவுக்கும் இடையிலான வலுவான, நீண்டகால நல்லுறவை மறுஉறுதி செய்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்