சிங்கப்பூரின் வெளியுறவுக் கொள்கை நடுநிலையான அணுகுமுறையைக் கொண்டிருக்காது. ஆனால், தேசிய நலனை முன்னிட்டு கொள்கை ரீதியாக நிலையாகச் செயல்படும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
“நாங்கள் எந்தவொரு பக்கமும் சாயமாட்டோம். கொள்கைகளின் அடிப்படையில் செயல்படுவோம்,” என்றார் அவர்.
சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள், பிளவுபட்டுள்ள உலகில் எப்படிப் பயணிக்க முடியும் என்பது குறித்து அவர் பேசினார்.
“உண்மையில், சீராகச் செயல்பட்டு, விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதால் எனக்குக் குறைவான அழுத்தமே ஏற்படுகிறது. நான் வாஷிங்டனுக்குச் சென்றாலும், பெய்ஜிங்கிற்குச் சென்றாலும், இதையே வலியுறுத்துவேன்,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரின் தேசிய நலனை முன்னெடுத்துச் செல்ல நட்புறவுகளை மேம்படுத்தி அனைவருக்கும் நம்பகமான, ஊகிக்கக்கூடிய பங்காளியாக சிங்கப்பூர் இருக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் ஷா அறக்கட்டளை முன்னாள் மாணவர் இல்ல அரங்கத்தில் நடைபெற்ற ‘மாஜுலா: சிங்கப்பூர் கதையின் அடுத்த அத்தியாயம்’ என்ற நிகழ்ச்சியில் திரு விவியன் பாலகிருஷ்ணன் பேசினார்.
இதில் 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

