மக்கள் வாக்களித்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தால், மாற்றம் வரும்வரை மக்களுக்காகக் குரல் கொடுத்து, சிங்கப்பூரர்கள் சந்திக்கும் பிரச்சினைகளைக் களைய அயராது பணி செய்வேன் என்று கூறினார் பாட்டாளிக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடவுள்ள திருவாட்டி பெரிஸ் வி பரமேஸ்வரி, 51.
தமிழ் முரசுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் அவர் அவ்வாறு கூறினார்.
மே 3ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடவுள்ள இறுதிக்கட்டப் புதுமுகங்களை அக்கட்சி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) அறிமுகம் செய்தது.
அறிமுகம் செய்யப்பட்ட மூன்று புதியவர்களுள் ஒருவர் திருவாட்டி பெரிஸ். சிங்கப்பூர்க் கடற்படையில் பணிபுரிந்த இவர் முன்னாள் அமெரிக்கக் கடற்படைப் பாதுகாப்பு அதிகாரியாவார்.
கடந்த 18 ஆண்டுகளாகச் செய்துவந்த அலுவலகப் பணியைத் துறந்து அரசியலுக்கு வந்தது ஏன் என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், “நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல மாற்றம் தேவை என்று கருதி, மக்கள் வாழ்விலும் அதை ஏற்படுத்த, எனது பணியைத் துறந்தேன்,” என்றார் திருவாட்டி பெரிஸ்.
நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தேவையான மூன்று முக்கியப் பண்புகளாக அவர் கருதுபவை என்னவென்று கேட்டபோது, ‘துணிச்சல்’ என்ற சொல்லை மூன்று முறை உச்சரித்து அதுவே சூழலின் தேவை என்று திருவாட்டி பெரிஸ் கூறினார்.
தொண்டூழியம் மூலம் மக்களுக்குச் சேவை செய்வதைத் தொடரலாம் என்ற நிலையில் அதிகாரத்தை நோக்கிய பயணம் எதனால் என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், ‘‘நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் குரலால் மாற்றத்தை ஏற்படுத்த இயலும்,’’ என்று நம்பிக்கை தெரிவித்தார் அவர்.
சிங்கப்பூரர்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலையில் சிங்கப்பூரை வைத்திருப்பது இலக்கு என்று குறிப்பிட்ட அவர், “பல சவால்களைச் சந்திக்க நேரிடலாம். அவற்றை எதிர்கொள்ளவும் தயார்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“தேவைப்பட்டால் அன்னை தெரசாவாகவும் இருப்பேன். மலாலா யூசஃப்சாய் போன்றும் செயலாற்றுவேன்,” என்கிறார் திருவாட்டி பெரிஸ்.