சிங்கப்பூரில் குரல் வழி உத்தரவுகளை ஏற்று கைப்பேசி செயலிகளை எளிதாகக் கையாள்வதற்கு ‘சண்டே’ எனும் புதிய செயற்கை நுண்ணறிவுச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
பார்வைத் திறன் குறைபாடுள்ளோர் செயலிகளை எளிதாகப் பயன்படுத்தவும் மூத்தோர், பணிச்சுமை மிகுந்த பெற்றோர், கை நடுக்கம் உள்ளவர்கள் ஆகியோருக்கு உதவவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
உணவகத்தைத் தேடி முகவரியை நண்பருக்கு அனுப்புவது, விமானப் பயண உறுதி விவரத்தை நாள்காட்டியில் சேர்ப்பது அல்லது ‘கிராப்’ வாகனத்தை முன்பதிவு செய்வது போன்ற பல கட்டப் பணிகளை ‘சண்டே’ நிறைவேற்றுகிறது.
ஆப்பிளின் ‘சிரி’, அமேசானின் ‘அலெக்சா’ ஆகிய குரல் செயலிகளால் இத்தகைய பணிகளைச் செய்ய இயலாது.
சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழக மாணவர் ராஜசெல்வம் கல்யாணராமன் தலைமையிலான குழு அச்செயலியை உருவாக்கியது.
அதில், அதே கல்லூரியைச் சேர்ந்த குணால்குமார் செந்தில்குமார், பிரவீன் ஆகியோரும் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் மாணவி தேவதர்ஷினி குமாரும் இடம்பெற்றுள்ளனர்.
ஹுவாவே நிறுவனத்தின் ‘டெக்4சிட்டி’ புத்தாக்கப் போட்டியில் அக்குழு முதல் பரிசான 16,000 வெள்ளியை வென்றது. லாஞ்ச்பேட் @ ஒன்-நார்த் பகுதியில் அக்டோபர் 27ஆம் தேதி நடந்த அப்போட்டியில் 15 கல்வி நிறுவனங்களிலிருந்து 240 படைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன.
பயனரின் குரல் கோரிக்கையை எழுத்தாக்கி, கூகலின் ஜெமினை செயற்கை நுண்ணறிவுக்கு அனுப்பிப் பணிகளை இச்செயலி செயல்படுத்துகிறது.
ஆயினும், சிங்பாஸ் உள்நுழைவு, வங்கிப் பணப் பரிவர்த்தனைகள் போன்ற இடங்களில் பாதுகாப்பு கருதி அச்செயலி இறுதிப் பணம் செலுத்தும் பொத்தானை அழுத்தாது. அப்பணிகளைப் பயனரே முடிக்க வேண்டும்.
சிங்கப்பூர் பார்வைக் குறைபாடுள்ளோர் சங்கம் மூலம் 73 பேர் ‘சண்டே’ செயலியைப் பரிசோதித்துள்ளனர்.
கூகல் ஃபிளே ஸ்டோர் தளத்தில் விரைவில் கிடைக்கவுள்ள அச்செயலிக்கு மாதம் 10 அமெரிக்க டாலர் கட்டணம் வசூலிக்கவும் பரிசுத் தொகையைக் கொண்டு செயலியை விரைவுபடுத்தவும் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
