கலைத் துறையினருக்குத் தற்காப்பு அமைச்சில் தொண்டூழிய வாய்ப்பு

கலைத் துறையினருக்குத் தற்காப்பு அமைச்சில் தொண்டூழிய வாய்ப்பு

2 mins read
0469cb0a-128b-4f6b-b213-cbe434186a37
தேசிய விளையாட்டரங்கில் சனிக்கிழமை (ஜூலை 25) நடந்த தற்காப்பு அமைச்சின் தொண்டூழியர்களுக்கான பாராட்டு விழாவில் அமைச்சர் சான் சுன் சிங் கலந்துகொண்டார். - படம்: சாவ்பாவ்

தேசிய தின அணிவகுப்பு போன்ற தற்காப்பு அமைச்சு ஏற்பாடு செய்யும் முக்கிய நிகழ்ச்சிகளில் இனி நிகழ்த்துகலையில் திறனும் ஆர்வமும் உள்ளோர் தொண்டூழியம் செய்யலாம்.

அதற்கான மூன்று புதிய திட்டங்களைச் சனிக்கிழமையன்று (ஜூலை 25) தற்காப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியது.

அத்திட்டங்களின் மூலம் நடனக் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் ஒலிப் பொறியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் போன்ற தொழில்நுட்பத் திறன் படைத்தவர்கள் தொண்டூழியர்களாக இணையலாம் என அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

மேலும், தொழில்நுட்பத் திறன் இல்லாதவர்களும் இதர வழிகளில் உதவவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தற்காப்புத் துறையில் ராணுவப் பணிகள் அல்லாத பிற நடவடிக்கைகளில் பொதுமக்கள் பங்காற்றுவதை ஊக்குவிக்க சிங்கப்பூர் தற்காப்புத் தொண்டூழியர் கட்டமைப்பின் மூலம் (எஸ்ஜி டிஃபன்ஸ்) பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மே மாதம் அறிமுகம் கண்ட அந்த அமைப்பில் இணைய இதுவரை கிட்டத்தட்ட 300 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

சிங்கப்பூர் ஆயுதப்படை தொண்டூழியர் படை உள்ளிட்ட சிங்கப்பூர் ஆயுதப்படையின் பல்வேறு தொண்டூழியத் திட்டங்களை இந்தக் கட்டமைப்பு ஒருங்கிணைக்கிறது.

மேலும், அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில், தற்போதுள்ள கிட்டத்தட்ட 1,500 ராணுவம், பொதுமக்கள் அடங்கிய தொண்டூழியர்களின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டம் போன்ற வெளிநாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு தற்காப்புத் துறை சார்ந்த ஆயத்தப் பணிகளில் அப்புதிய தொண்டூழியர்கள் ஈடுபடுவர்.

புதிய தொண்டூழியத் திட்டங்களில் தற்காப்பு அமைச்சுடன் இணைந்து ‘சோ டிரமா! என்டர்டெயின்மென்ட்’ (So Drama! Entertainment) நிறுவனம் பணியாற்றவுள்ளது.

சனிக்கிழமையன்று (ஜூலை 25) தேசிய விளையாட்டரங்கத்தில் தற்காப்பு அமைச்சின் தொண்டூழியர்களுக்கான பாராட்டு விழா நடந்தது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய அத்துறைக்கான அமைச்சர் சான் சுன் சிங், தற்காப்புத் துறையின் எல்லைகள் விரிவடைந்து வருவதால், சட்டம், ஊடகம் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களின் உதவி நாட்டிற்கு அதிக அளவில் தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்