தொண்ணூறு வயதைத் தொடப்போகும் திருவாட்டி ரத்னம் பெரியசாமி தொண்டூழியத்தில் இன்னும் ஆர்வம் காட்டி வருகிறார்.
தோ பாயோ வட்டாரத்தில் நிகழும் மூத்தோருக்கான நடவடிக்கைகளில் பங்கேற்கச் செய்ய வீடு வீடாகச் சென்று முதியோர்களைத் திரட்டும் பணியை அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.
‘கேர் கார்னர் சிங்கப்பூர்’ அமைப்பின் அக்கம்பக்கக் கட்டமைப்புத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள ஆக மூத்த தொண்டூழியர் திருவாட்டி ரத்னம். மார்ச் மாதம் வந்தால் அவருக்கு 90 வயது.
எளிதில் பாதிக்கப்படக்கூடிய மூத்தோருடன் நட்பாகப் பழகி ஆதரவு வழங்க அந்தந்த குடியிருப்புப் பேட்டைகளில் உள்ளோருக்குப் பயிற்சி அளிக்கிறது அந்தத் திட்டம்.
திருவாட்டி ரத்னம் பள்ளிப் பருவத்திலேயே தமது தொண்டூழியத்தைத் தொடங்கிவிட்டார். தேவைப்படும் குழந்தைகளுக்கு துணைப்பாட வகுப்புகளை இலவசமாகச் சொல்லித் தரும் மாணவியாக சிறுவயதில் திகழ்ந்தவர் அவர்.
அந்த அனுபவங்களை நினைவுகூரும் திருவாட்டி ரத்னம், தொண்டூழியம் என்பது தமது மனத்தில் பதிந்துவிட்ட ஓர் உணர்வு என்கிறார்.
கணவரை இழந்த அவர், பள்ளிக்குப் பிந்திய பராமரிப்புச் சேவை ஒன்றில் ஆசிரியராக வேலை செய்து ஓய்வுபெற்றவர். தற்போது ஐந்து பிள்ளைகளும் ஆறு பேரப் பிள்ளைகளும் அவருக்கு உள்ளனர்.
அறுபது வயதாகும் அவரது ஆக இளைய மகனின் குடும்பத்துடன் அவர் தற்போது வசித்து வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
“சமூக சேவை புரிவது எனக்குப் பிடித்தமான ஒன்று. வெளியே சென்று மக்களைச் சந்திக்க அதன்மூலம் எனக்கு வாய்ப்பு கிடைக்கிறது,” என்று கூறுகிறார் திருவாட்டி ரத்னா.
கடந்த 2023ஆம் ஆண்டு கீழே விழுந்து இடுப்பில் முறிவு ஏற்பட்டதால், தற்போது ஊன்றுகோலின் உதவியுடன் நடக்கிறார் அவர்.
ஆனாலும், “நான் நன்றாக இருக்கிறேன்,” என்று சொல்லிக்கொண்டே தொண்டூழியத்தைத் தொடருகிறார் அந்த துடிப்புமிக்க மூதாட்டி.
வீடு வீடாகச் சென்று மூத்தோரை உடல்நல நடவடிக்கைகளுக்கு அழைப்பதில் உள்ள சவால்களை திருவாட்டி ரத்னா விவரித்தார்.
“மூத்தவர்களுக்கும் குழந்தைகளைப் போன்ற மனநிலை உண்டு. சிலர் கதவைத் திறக்க மாட்டார்கள். வேறு சிலர், வெளியே வந்து நடவடிக்கைகளில் பங்கேற்க விருப்பமில்லை என்பார்கள். அனைத்தையும் சந்திக்க எங்களுக்கு பொறுமை வேண்டும். பாராட்டைக் காட்டிலும் அவர்களின் நலனே முக்கியம்,” என்றார் மூத்தோருக்கு முன்னுதாரணமாகத் திகழும் அந்த மூதாட்டி.

