தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மக்களின் தேவையை நன்கு பூர்த்தி செய்பவர்களுக்கு வாக்களியுங்கள்: பிரதமர் வோங்

4 mins read
9cc9e85f-5922-4b6e-8ed3-c10ef9990919
பிரசார உரையாற்றிய பிரதமர் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலகமெங்கும் கொந்தளிப்பாக இருப்பதால் வரும் பொதுத் தேர்தல் சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் மிக முக்கியமான ஒன்று என்றார் பிரதமர் வோங்.

வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு மக்கள் செயல் கட்சியின் முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் வோங், மசெகவின் மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதியில் களமிறங்குகிறார்.

10 ஆண்டுகளுக்கு முன்னர் மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதி உருவாக்கப்பட்ட போது தேர்தலில் வெற்றி கண்டு தொகுதிக்குத் தலைமை தாங்கிய திரு வோங்குக்கு, பிரதமராகப் பதவியேற்ற பிறகு இது முதல் தேர்தல்.

வியாழக்கிழமை மாலை (24 ஏப்ரல்) உட்லண்ட்ஸ் விளையாட்டரங்கில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர்.

பிரசாரத்தில் கூடிய ஏராளமான மக்கள்.
பிரசாரத்தில் கூடிய ஏராளமான மக்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் சிலர் மசெக சிங்கப்பூரர்களிடம் பயத்தை ஏற்படுத்தவதாகக் கூறுகின்றனர். இது உண்மையா?” என்று பிரதமர் வோங் கூறிய போது ஆதரவாளர்கள் பலமாகக் கைதட்டி ஆதரவு அளித்தனர்.

விளையாட்டரங்கில் திரண்டு இருந்த ஆதரவாளர்கள் மசெகவுக்கு ஆதரவளிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தி வந்தனர்.

பிரசாரத்திற்கு மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதியில் மசெகவின் இதர வேட்பாளர்களான ஹெனி சோ, அலெக்ஸ் யாம், ஸாக்கி முகம்மது ஆகியோரும் வந்திருந்தனர்.

அவர்களுடன் மசெகவின் செம்பவாங் குழுத்தொகுதிக்குத் தலைமை தாங்கிப் போட்டியிடும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங், செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதியில் போட்டியிடும் திருவாட்டி போ லி சான் ஆகியோரும் இருந்தனர்.

அமெரிக்காவின் வரி விதிப்பு உலகை மிக மோசமாகப் புரட்டிபோடுவதாக சொன்ன மசெகவின் தலைமைச் செயலாளருமான திரு வோங், இத்தகைய சூழல் தொழில்களுக்கு மிகுந்த அழுத்தம் தருவதாகச் சொன்னார்.

“இந்தச் சவால்கள் சிங்கப்பூருக்குப் பெரிதளவில் ஆபத்து இல்லை என்று இதர கட்சிகள் கூறும் போது அவர்கள் சவால்களின் தீவிரத்தை அறிந்து தான் சொல்கிறார்களா?” என்று கேள்வி எழுப்பினார் திரு வோங்.

மசெக சிங்கப்பூரர்களின் வாழ்க்கையைச் சூதாடாது என்று சொன்ன பிரதமர் வோங், இந்த மாறிவரும் உலகில் கட்சி சிங்கப்பூரர்களை எப்போதும் முதலில் வைக்கும் என்று கூறினார்.

“பொதுத் தேர்தல் வரும் போது கட்சிகள் சில முன்வைக்கும் பரிந்துரைகள் கேட்பதற்கு மிகக் கவர்ச்சியாக இருக்கும். ஆனால் அவை நடைமுறைக்கு ஏற்றவையல்ல,” என்று பிரதமர் வோங் புன்முறுவலுடன் கூறிய போது மக்கள் கூச்சலிட்டு கைதட்டினர்.

மசெக சவால்மிக்க சூழலிலும் சிங்கப்பூர் பொருளியலை நன்றாக நிர்வகிக்கும் சக்தி கொண்டது என்று குறிப்பிட்ட பிரதமர் வோங், கட்சியில் இருக்கும் ஒவ்வோர் உறுப்பினரும் மிக முக்கியம் என்றார்.

கொவிட்-19 சூழலில் தன்னுடன் கூடவே நின்ற துணைப் பிரதமர் கான் கிம் யோங்கைத் தமது உரையில் குறிப்பிட்ட திரு வோங், “ஆலோசனை தேவைப்பட்டால் நான் திரு கானிடம் செல்வேன்,” என்றும் மசெகவின் பொங்கோல் குழுத்தொகுதியில் களமிறங்கும் திரு கானுக்கு சிங்கப்பூரர்கள் ஆதரவு வழங்கவேண்டுமென்றும் திரு வோங் கேட்டுக்கொண்டார்.

அதே வகையில் மசெகவின் சுவா சூ காங் குழுத்தொகுதியில் களமிறங்கும் மனிதவள அமைச்சர் டான் சீ லெங்குக்கும் மக்கள் வாக்களிக்க வேண்டுமென்ற திரு வோங், வரும் தேர்தலில் போட்டியிடாத நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பற்றியும் பேசினார்.

“அனுபவம் மிக்கவர்கள் பதவி இறங்கினாலும் நான் திறமைசாலியான பல புதிய முகங்களை அறிமுகம் செய்துள்ளேன். அவர்களில் ஒருவர் தினேஷ் வாசு தாஸ். தேர்தலில் வெற்றி கண்டால் அவருக்கு அரசாங்கப் பதவி வகிப்பதற்குத் தகுதி இருக்கிறது,” என்றார் அமைச்சர் வோங்.

சிங்கப்பூரர்களுக்கு மசெக வைத்துள்ள திட்டங்கள் பல என்ற திரு வோங், அதில் ஒன்று தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் அடுக்குமாடி வீடுகளைக் கட்டுப்படியாகும் வகையில் வழங்குவது என்றார்.

“பலர் நாடாளுமன்றத்தில் கூடுதலான எதிர்க்கட்சி குரல் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றனர். முன்பைவிட எதிர்க்கட்சி குரல்கள் இப்போது அதிகமாகவே உள்ளது. இந்தப் போட்டி கடுமையானது. சிங்கப்பூரர்களின் தேவைகளை யாரால் நன்கு பூர்த்தி செய்ய முடியுமோ அவர்களுக்கு நீங்கள் வாய்ப்பு அளியுங்கள். நானும் எனது குழுவும் உங்களுக்குச் சேவையாற்ற எங்களுக்கு வாக்களியுங்கள்,” என்று திரு வோங் கேட்டுக்கொண்டார்.

“செம்பவாங்கில் திருவாட்டி போ லி சானுக்கு எதிராகப் போட்டியிடும் டாக்டர் சீ சூன் ஜுவானை மக்கள் தேர்ந்தெடுத்தால் என்னால் அவருடன் ஒத்துழைத்து வேலை செய்ய முடியாது. அவர் என்னுடன் கைகோர்க்க மாட்டார். அவர் அரசாங்கத்திற்கு சவால் விடுபவர்,” என்று அமைச்சர் ஓங் அவரது உரையில் வலியுறுத்தினார்.

டாக்டர் சீ திருவாட்டி போவை குறைத்து எடைபோட்டு விட்டார் என்று தாம் கருதுவதாகவும் திரு ஓங் கூறினார்.

மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதியின் உட்குரோவ் பிரிவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திருவாட்டி ஹேனி சோ, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தமது குடியிருப்பாளர்களுக்கு பல திட்டங்களை முன் வைத்துள்ளதாகச் சொன்னார்.

மேம்பாலங்களில் மின்தூக்கிகள் அமைப்பது, இளம் குடும்பங்களுக்கு ஆதரவு அளிப்பது அவற்றில் அடங்கும் என அவர் உறுதியளித்தார்.

10,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில் அவர் உதவியுள்ளதாகச் சொன்ன திருவாட்டி போ, மக்கள் அவருக்கு வாக்களித்தால் அவர் செம்பவாங் வெஸ்ட் தொகுதியின் உள்கட்டமைப்பைச் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகச் சொன்னார்.

“எனக்கு எதிராகப் போட்டியிடுபவர் அவர் தேர்தலில் வெற்றி கண்டால் பொருள், சேவை வரியைக் குறைக்க இருப்பதாகச் சொன்னார். ஆனால், சிங்கப்பூரர்கள் சிலர் வரி கட்டாமல் இருக்கும் போது பொருள், சேவை வரியை எவ்வாறு குறைக்க முடியும்? திட்டங்கள் முன்வைக்கும் போது அவை நடைமுறைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்!” என்றார் திருவாட்டி போ.

“இக்கட்டான சூழ்நிலைகளில் உதவுவது, இயலாதோருக்கு ஆதரவு வழங்குவது ஆகியவை ஜனநாயகத்தின் உண்மையான வேலை. பொறுப்புமிக்க கட்சிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்,” என்று அலெக்ஸ் யாம் குறிப்பிட்டார்.

பிரதமர் வோங்குக்கு வாக்களிப்பது சிங்கப்பூரர்கள் அவர்களின் எதிர்காலத்திற்கு வாக்களிப்பதற்குச் சமம் என்றார் மனிதவள, தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது.

“முதல் முறையாக நான் ஒரு தேர்தல் பிராசாரத்தைப் பார்க்கிறேன். இந்தச் சூழல் மிக வித்தியாசமாக இருந்தது. இங்கு வந்து பலரைக் காணும் போது சிங்கப்பூரின் கம்பத்து உணர்வு தென்படுகிறது,” என்றார் மார்சிலிங் வட்டாரத்தில் குடியிருக்கும் நேஷ் பிரபு, 25.

குறிப்புச் சொற்கள்