பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாள் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் நாள்தோறும் செய்தியாளர் சந்திப்புகளில் பங்கேற்று வருகின்றனர்.
அவ்வகையில் ஹவ்காங் தனித்தொகுதியின் பாட்டாளிக் கட்சி வேட்பாளர் டெனிஸ் டான், 54, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) காலை ஹவ்காங் உணவங்காடியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார்.
ஹவ்காங் மக்களுக்குச் சேவை செய்வதில் பெருமைகொள்வதாகக் கூறிய திரு டான், தேசிய அளவிலும், அன்றாட வாழ்விலும் தங்களைப் பாதிக்கக்கூடிய பலவற்றைக் குடியிருப்பாளர்கள் தம்மிடம் பகிர்ந்து கொள்வதாகவும் சொன்னார்.
2020ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் 61.21 விழுக்காட்டு வாக்குகளுடன் மக்கள் செயல் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்த திரு டான், தொகுதியில் தமக்கு நல்ல ஆதரவு தென்படுவதாகவும் சொன்னார்.
‘‘நம்மிடையே அதிக எண்ணிக்கையில் மூத்தோர் உள்ளனர். அவர்களது கவலைக்குரிய அம்சங்களான சுகாதாரப் பராமரிப்புச் செலவினங்கள், மானியங்கள், குறிப்பாகக் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி மெடிசேவ் கணக்கில் உள்ள தொகையைப் பயன்படுத்த நினைப்பது உள்ளிட்ட பற்பல அம்சங்களுக்கு நாடாளுமன்றத்தில் குரல்கொடுக்க விழைகிறேன்,” என்று கூறிய திரு டான், முன்னெடுத்துள்ள மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடர தமக்கு மக்கள் மீண்டும் ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அண்மையில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டபோது, இளம் வாக்காளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தம்மிடம் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர் என்றார்.
“என்னைச் சந்தித்த இளம் வாக்காளர் ஒருவர், அரசாங்கத்தைக் கவனமுடன் செயல்பட வைக்கப் பாட்டாளிக் கட்சிக்கு வாக்களிப்பேன். அப்போது அவர்கள் சிங்கப்பூர்களுக்காகக் கடுமையாக உழைப்பார்கள் என்றார். அதைக் கேட்கையில் நெகிழ்ச்சியாக இருந்தது,” என்று சொன்னார் திரு டான்.
சிங்கப்பூரில் ஹவ்காங் ஜனநாயகத்தின் ஒளிவிளக்காகத் திகழ வேண்டும் என்று இளம் வாக்காளர் ஒருவர் விருப்பம் தெரிவித்ததாகச் சொன்ன திரு டான், ‘‘தொகுதி மக்களின் ஆதரவைத் தக்கவைக்கக் கடுமையாக உழைப்பேன்,’’ என்றும் உறுதிகூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தம்மை எதிர்த்துப் போட்டியிடும் மக்கள் செயல் கட்சியின் மார்ஷல் லிம்முக்கு வாழ்த்து தெரிவிப்பதாக அவர் சொன்னார்.
பாட்டாளிக் கட்சியின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்து வருகிறது ஹவ்காங். இத்தொகுதியில் நிலவும் வெற்றிவாய்ப்பு பற்றிய கேள்விக்குப் பதில் கூறிய திரு டான், “பாட்டாளிக் கட்சி இதுவரை பெற்றுவந்துள்ள வெற்றிகளால் இளைப்பாறவில்லை.
‘‘குறைகள் ஏதுமின்றி முழு நிறைவானவர்களாக ஒருபோதும் இருக்க இயலாது. என்றபோதிலும், இயன்றவரை சிறப்பாகச் செயல்பட்டு குடியிருப்பாளர்களுக்கு உதவ தொடர்ந்து முயன்று வருகிறோம். அதுவே எங்கள் அணி கொண்டுள்ள இலக்கு,’’ என்று கூறினார்.

