சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்திருப்பதால், சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் ஆகியோரின் சம்பள உயர்வும் மெதுவடையும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்து உள்ளது.
சம்பளங்களும் விலைகளும் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு செல்ல முயலும் அபாயம் குறைவு என்று நேற்று குறிப்பிட்ட ஆணையம், அண்மைக் காலங்களில் விலைகளைக் காட்டிலும் சம்பளங்கள் மெதுவாக உயர்கின்றன என ஆய்வுகள் காட்டுகின்றன என்றும் கூறியது.
இருப்பினும், கொள்கையும் நிர்வாக அம்சங்களும், எந்த குறிப்பிட்ட துறையில் மக்களின் சம்பளம் மெதுவடையும் என்பதை தீர்மானிக்கும் என்றும் ஆணையம் ஈராண்டுகளில் ஒருமுறை வெளியிடும் தனது அறிக்கையில் தெரிவித்தது.
படிப்படியாக உயரும் சம்பள முறையில் மேம்பாடுகள், அரசாங்க சேவை ஊழியர்களின் சம்பள உயர்வு, சுகாதாரப் பராமரிப்புத் துறை, கல்வித் துறை ஆகியவற்றில் பணியாற்றும் குறைந்த சம்பள ஊழியர்களில் வருவாயை உயர்த்தும் கொள்கைகள், ஒட்டுமொத்த மக்களின் சம்பள உயர்வுக்கு ஆதரவளிக்கும்.
சம்பள உயர்வு பல்வேறு துறைகளுக்கிடையே மாறுபட்டிருக்கும். பயணம் தொடர்பான வேலைகளில் அது உயர்வாக இருக்கும். கட்டுமானம், சொத்துச் சந்தை, சில்லறை விற்பனை, உணவு பானத்துறை ஆகியவற்றின் சம்பள உயர்வு, வர்த்தகம், உற்பத்தித் துறை ஆகியவற்றின் சம்பள உயர்வைவிட சற்று குறைவாக இருக்கும்.
பணவீக்கத்தின் தாக்கத்தால் உண்மை ஊதியத்தின் வளர்ச்சி, அதிக வருவாய் ஈட்டும் ஊழியர்களைக் காட்டிலும் குறைந்த வருவாய் ஈட்டும் ஊழியர்களிடம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
சிங்கப்பூர் பொருளியல் மெதுவடைவதால், தொழிலாளர் சந்தை இறுக்கமாகும் என்று ஆரம்பகட்ட அறிகுறிகள் காட்டுகின்றன.
வேலையிலிருந்து தற்காலிகமாக விடுப்பு எடுத்துக்கொள்ள வற்புறுத்தப்படும் ஊழியர்களின் எண்ணிக்கையும் வாரத்துக்குக் குறைவான நாள்களே வேலை செய்ய பணிக்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளன. நான்காம் காலாண்டில் ஆட்குறைப்பு நடவடிக்கையும் கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்துக்கு முந்திய நிலையை அடைந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
உயரந்த சம்பளம் தரும் பதவி களுக்காக வேலையை விட்டு புதிய வேலைக்குத் தாவுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
சிங்கப்பூர்வாசிகளின் சம்பள உயர்வும் ஆண்டு அடிப்படையில் நான்காம் காலாண்டில் 5.4% மெதுவடைந்தது. மூன்றாம் காலாண்டில் அது 7.1% ஆக இருந்தது. முன்னைய காலாண்டு மற்றும் பருவத்துக்கு ஏற்றவாறு சரிசெய்யப்பட்ட சம்பள உயர்வு நான்காம் காலாண்டில் 1% மெதுவடைந்தது. மூன்றாம் காலாண்டில் அது 1.2% ஆக இருந்தது.
கடந்த ஆண்டில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை 250,100 கூடியது. இது ஊழியரணியின் விகிதத்தை 2.9 விழுக்காடாக்கியது. இது கிருமித் தொற்றுக்கு முந்திய நிலையைவிட அதிகம்.
சிங்கப்பூர்வாசிகளின் வேலையில்லா விகிதம் செப்டம்பரில் 2.9%லிருந்து டிசம்பரில் 2.8%க்குக் குறைந்து, இவ்வாண்டில் முதல் இரண்டு மாதங்களில் 2.7%க்கு மேலும் குறைந்தது.