யூஹுவா தனித்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான அமைச்சர் கிரேஸ் ஃபூ, ஹொங் கா நார்த் வட்டாரம் பற்றி அடுத்த சில வாரங்களில் இன்னும் கூடுதலாகத் தெரிந்துகொள்ளவிருப்பதாக கூறியுள்ளார்.
அதோடு அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கேட்டறியவிருப்பதாகவும் அவர் சொன்னார்.
‘த யுஷுவல் பிளேஸ்’ (The Usual Place) எனும் ஸ்ரெய்ட்ஸ் டைமஸ் நாளேட்டின் நடப்பு விவகார வலையொளிக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் திருவாட்டி ஃபூ பேசினார்.
யூஹுவாவைப் போல ஹொங் கா நார்த் தனித்தொகுதியின் சில பகுதிகள் தேர்தல் தொகுதி எல்லை மறுஆய்விற்குப் பிறகு புதிய குழுத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
புதிய ஜூரோங் ஈஸ்ட்- புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதியின் கீழ் புக்கிட் பாத்தோக் தனித்தொகுதியும் ஜூரோங் குழுத்தொகுதியின் புக்கிட் பாத்தோக் ஈஸ்ட், கிளமெண்டி உள்ளிட்ட சில பகுதிகள் இணைகின்றன.
புதிய குழுத்தொகுதியில் உள்ள ஐந்தில் 4 தொகுதிகள் பழக்கப்பட்டவை என்று திருவாட்டி ஃபூ சொன்னார்.
புக்கிட் பாத்தோக், புக்கிட் பாத்தோக் ஈஸ்ட், கிளமெண்டி, யூஹுவா ஆகியவற்றுக்கு ஒரே நகர மன்றம் சேவை வழங்குகிறது.
அங்கு அடிக்கடி கூட்டங்கள் நடைபெறுவதால் அந்த வட்டாரம் தமக்குப் பரிட்சயமானது என்றார் திருவாட்டி ஃபூ.
தொடர்புடைய செய்திகள்
மறுபுறம் ஹொங் கா நார்த் அதிகம் பிடிப்பில்லாத வட்டாரம் என்ற அவர், அடுத்த சில வாரங்களில் அதைபற்றி அறிந்துகொள்வதில் கவனம் செலுத்தவிருப்பதாகக் குறிப்பிட்டார்.
2006ஆம் ஆண்டிலிருந்து யுஹுவா பகுதியைப் பிரதிநிதித்த திருவாட்டி ஃபூ, அதில் மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றார்.
மூப்படைந்த வட்டாரமான அதில் வாக்காளர் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது.
தனி உறுப்பினர் தொகுதிகளில் யூஹுவா தனித்தொகுதியில்தான் ஆக குறைவான வாக்காளர் எண்ணிக்கை பதிவானது. அங்கு 20,252 குடியிருப்பாளர்கள்தான் வாக்களிக்கத் தகுதிபெற்றனர்.
எல்லை மாற்றங்களின் கீழ், யூஹுவாவின் சில பகுதிகள் ஜூரோங் ஈஸ்ட்-புக்கிட் பாத்தோக் குழுத் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை புதிய ஜூரோங் சென்ட்ரல் தனித் தொகுதியின் ஒரு பகுதியாக மாறும்.
யூஹுவா போன்ற இடங்களில் முன்பிருந்த குடியிருப்பாளர்களின் பிள்ளைகள் வெளியேறி வருவதால் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், அருகிலுள்ள தெங்கா மற்றும் புக்கிட் பாத்தோக் வெஸ்ட் போன்ற புதிய நகரங்கள் மிக விரைவாக வளர்ந்து வருவதாக திருவாட்டி ஃபூ மீண்டும் குறிப்பிட்டார்.
“தற்போது, அங்கு வசிப்பவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விகிதம் மிக அதிகமாக உள்ளது. எங்களிடம் மிகவும் கடினமாக உழைக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும், அது சரிசமமாக இல்லை. எனவே நாம் அதை சமன் செய்ய வேண்டும். நான் அதிக சுமையை ஏற்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.