தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
சர்க்கரை சேர்ந்த பானங்களைப் போலவே, உப்பு, சாஸ், திடீர் நூடுல்ஸ், சமையல் எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகளுக்கு ஆரோக்கியத் தரநிலை முத்திரையும், விளம்பரத் தடைகளும் நீட்டிக்கப்பட உள்ளது.

உப்பு, கொழுப்பு சேர்க்கப்பட்ட உணவுப் பொருள்களில் ஆரோக்கிய முத்திரை

3 mins read
5a254d8f-81ca-47f3-bfd2-d78159ce7ce5
பேரங்காடிகளில் விற்கப்படும் சோயா சாஸ், மிளகாய் சாஸ், சம்பால் டின்கள், சமையல் எண்ணெய், திடீர் நூடுல்ஸ் போன்றவற்றில் ஆரோக்கிய தரநிலை முத்திரைகளை எதிர்பார்க்கலாம் என்று அமைச்சர் ஓங் கூறினார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இனிப்பின் அளவைப் பொறுத்து பானங்களில் அதன் தரம் குறிப்பிடப்படுவதைப்போல, இனிமேல் உப்பின் அளவைப் பொறுத்து உணவுப்பொருள்களின் ஆரோக்கிய தரநிலை குறிப்பிடப்பட உள்ளது.

உணவுப்பொருள்கள் ‘ஏ’ முதல் ‘டி’ வரை தரம் பிரிக்கப்படும். ‘டி’ மிக அதிகளவு சோடியம் மற்றும்/ அல்லது பூரிதநிலையடைந்த கொழுப்புடன் (saturated fat) குறைந்த ஆரோக்கியமான தேர்வாக இருக்கும்.

சிங்கப்பூரர்கள் அதிகமாக உப்பு உட்கொள்வதாக ஆய்வுகளில் தெரியவந்ததை அடுத்து இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது.

உப்பு, சாஸ், சுவையூட்டிகள், திடீர் நூடுல்ஸ், சமையல் எண்ணெய்கள் போன்றவை மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். எனவே இந்தப் பொருள்களைப் பார்த்ததுமே அதன் சத்துணவுத் தரத்தை அறிந்துகொள்ளும் வகையில் ஆரோக்கியத் தரநிலை முத்திரைகள் அமையும்.

முன்கூட்டியே பொட்டலமிடப்பட்ட மற்றும் புதிதாகத் தயாரிக்கப்பட்ட பானங்களில் சத்துணவுத் தர விவரம் கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து தற்போது உணவுப் பொருள்களில் இது இடம்பெறுகிறது. இனிப்பு அதிகமுள்ள பானங்கள் ‘சி’ அல்லது ‘டி’ என்று தரப்படுத்தப்படுகின்றன. ‘டி’ தரத்திலிருக்கும் பானங்களை விளம்பரப்படுத்துவதிலும் தடைகள் உள்ளன.

இந்த முத்திரையின் காரணமாகவும் விளம்பரக் கட்டுப்பாடுகளாலும் சிங்கப்பூரர்கள் தற்போது குறைவான சர்க்கரையைச் சேர்த்துக்கொள்கிறார்கள்.

“உணவுப்பொருள் தயாரிப்பாளர்கள் பலர் புதிய சுவைக்கு ஏற்றவாறு தங்கள் பானங்களை மாற்றி அமைத்துள்ளனர். சர்க்கரையைப் பொறுத்தவரை, ஆரோக்கிய தரநிலை முத்திரை மக்களின் சுவையை மாற்றியுள்ளது என்று நம்புகிறேன்,” என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறினார்.

“கடந்த ஆண்டு, சந்தைக்கு வந்த மூன்றில் இரண்டு பங்குக்கு மேற்பட்ட பானங்கள் ‘ஏ’, ‘பி’ தரங்களிலேயே இருந்தன. இந்த எண்ணிக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக இருந்தது,” என்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) உலகளாவிய ஆசிய பசிபிக் குடும்ப மருத்துவர் வட்டார மாநாட்டில் உரையாற்றியபோது அவர் கூறினார்.

இந்த முயற்சிகளால் ஏற்பட்ட நேர்மறையான தாக்கத்தை வரவேற்ற சுகாதார அமைச்சு, முன்னதாகவே பொட்டலமிடப்பட்ட உப்பு, சாஸ், சுவையூட்டிகள், திடீர் நூடுல்ஸ், சமையல் எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகளுக்கு ஆரோக்கியத் தரநிலை முத்திரையும், விளம்பரத் தடைகளும் நீட்டிக்கப்படும் என்று ஆகஸ்ட் 22 அன்று தெரிவித்தது.

இத்தகைய பொருள்களுக்கும் உணவுகளுக்கும் ஏற்கெனவே ஆரோக்கியமான மாற்று உள்ளதால், அவை முத்திரை குத்தப்பட வேண்டும் என்று திரு ஓங் கூறினார்.

இதன்படி, இனிமேல், பேரங்காடிகளில் விற்கப்படும் சோயா சாஸ், மிளகாய் சாஸ், சம்பால் டின்கள், சமையல் எண்ணெய், திடீர் நூடுல்ஸ் போன்றவற்றில் ஆரோக்கியத் தரநிலை முத்திரைகளை எதிர்பார்க்கலாம் என்றார் அமைச்சர் ஓங்.

பல தொழில்துறையினர் ஆரோக்கியமான உணவுகளை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளனர். உப்பு, பூரிதநிலையடைந்த கொழுப்பு ஆகியவற்றில் கவனம்செலுத்தும் வகையில் சத்துணவு வரம்பு உள்ளிட்ட விவரங்களை உருவாக்க தொழில்துறையினருடன் ஆலோசனைகளை நடத்துவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தர நிர்ணயத்துக்கு ஏற்ப உணவுப்பொருள்களைத் தயாரிக்க தொழில்துறையினருக்குப் போதுமான கால அவகாசத்தை வழங்கும்.

சோடியம் குளோரைடு என்றும் அழைக்கப்படும் உப்பில், கிட்டத்தட்ட 40 விழுக்காடு சோடியம், 60 விழுக்காடு குளோரைடு உள்ளது. பூரிதநிலையடைந்த கொழுப்பானது பொதுவாக அறை வெப்பநிலையில் திடமாக இருக்கும். வெண்ணெய், செம்பனை - தேங்காய் எண்ணெய், பாற்கட்டி, அதிக கொழுப்புள்ள இறைச்சி போன்ற உணவுகளில் இந்தக் கொழுப்பு அதிக அளவில் உள்ளது.

அதிக உப்பு உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்; இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். மற்ற உடல்நலப் பிரச்சினைகளுடன் அதிகப்படியான உணவுக் கொழுப்பு உட்கொள்ளுதல் உடற்பருமன், இருதய நோய், சில வகையான புற்றுநோய்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

சிங்கப்பூரில் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை கடந்த ஐந்து ஆண்டுகளில் 24 விழுக்காட்டிலிருந்து 37 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பலருக்கு ஹைப்பர்லிபிடேமியாவும் (அதிகக் கொழுப்புச்சத்து) கவலைக்குரிய வகையில் அதிகமாக உள்ளது. சிங்கப்பூர் குடியிருப்பாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்த நிலையைக் கொண்டுள்ளனர் என்று அமைச்சர் ஓங் கூறினார்.

இரு நிலைமைகளும் இதய நோய்க்கான குறிப்பிடத்தக்க ஆபத்துக் காரணிகளாகும். இந்த இரண்டுக்கும் வழிவகுக்கும் முக்கியப் பொருள்களாக சோடியமும் பூரிதநிலையடைந்த கொழுப்பும் உள்ளன. சிங்கப்பூர் மக்கள் அதிகளவில் அவற்றை உட்கொள்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்