சிங்கப்பூர் பாராலிம்பிக் குழுவிற்கு அமோக வரவேற்பு

சிங்கப்பூர் பாராலிம்பிக் குழுவிற்கு அமோக வரவேற்பு

2 mins read
705d5e05-39ec-4b54-ba8d-52ca945e8dea
குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் கூடியுள்ள பாராலிம்பிக் விளையாட்டு வீரர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

பாரிசில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியிலிருந்து திரும்பிய சிங்கப்பூர்க் குழுவினருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பத்துப் பேர் அடங்கிய குழு சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்தை வந்தடைந்ததும் பிரபல தேசிய தினப் பாடலான ‘ஹோம்’ ஒலிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 100 பேர் திரண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் போட்டியாளர்களின் குடும்பத்தினர், நண்பர்கள்.

உடற்குறையுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ‘பர்ப்பல் பரேட்’ இயக்கத்தின் உறுப்பினர்களும் ‘டீம் நிலா’ ஆதரவாளர்களும் அங்குக் கூடியிருந்தனர். அவர்கள் உள்ளூர் பாடகி கிட் சானின் பாடலைப் பாடி போட்டியாளர்களை மகிழ்வித்தனர்.

கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதிவரையிலான காலகட்டத்தில் ஆறு விளையாட்டுகளில் போட்டியிட்ட அந்த விளையாட்டாளர்களை முதலில் வரவேற்றார் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங்.

பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில், சிங்கப்பூருக்கு இரண்டு தங்கம், ஒரு வெள்ளி என மூன்று பதக்கங்கள் கிடைத்தன.

இந்நிலையில், வரும் செப்டம்பர் 14ஆம் தேதி சிங்கப்பூரின் பாராலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கான பேருந்து அணிவகுப்பு நகர்ப் பகுதியில் நடைபெறவுள்ளது.

அப்போது, பொதுமக்கள் சிங்கப்பூரின் பாராலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு தங்கள் பாராட்டுகளையும் ஆதரவையும் தெரிவிக்கலாம்.

ரசிகர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முற்பகல் 11.50 மணிக்கு சைனாடவுன், நண்பகல் 12.10 மணிக்கு ஆர்ச்சர்ட் ரோடு, பிற்பகல் 12.30 மணிக்கு சிராங்கூன் ரோடு, பிற்பகல் 12.40 மணிக்கு விக்டோரியா ஸ்திரீட் ஆகியவையே அந்தப் பகுதிகள்.

குறிப்புச் சொற்கள்