வாகனங்களை ஓட்டும்போது அல்லது பயணம் செய்யும்போது இருக்கைப் பாதுகாப்பு வாரைத் தளர்வாக அணிவது குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அது உடலில் இறுக்கமாக, பாதுகாப்பான முறையில் இருக்காமல் தளர்வாக இருக்க அதைக் கிளிப் போன்ற பொருள்களைப் பயன்படுத்திக் கட்டக்கூடாது என்று ஆணையம் வலியுறுத்தியது.
68 வயது டாக்சி ஓட்டுநரான லீக்கு இந்தப் பழக்கம் உள்ளது. தமது இருக்கைப் பாதுகாப்பு வாரின் மேல் பகுதியை அவர் மடிக்க அதைக் கிளிப் பயன்படுத்தி கட்டிவிடுவார். இருக்கைப் பாதுகாப்பு வார் தளர்வாக இருப்பதை தாம் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
நாள்தோறும் கிட்டத்தட்ட குறைந்தது எட்டு மணி நேரம் டாக்சி ஓட்டுவதால் இருக்கைப் பாதுகாப்பு வாரை இறுக்கமாக அணிந்துகொள்ள விரும்பவில்லை என்றார் அவர்.
“இவ்வாறு செய்வதற்கு அனுமதி இல்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் ஓட்டுநர்கள் இருக்கைப் பாதுகாப்பு வார் அணிந்திருக்கிறார்களா என்று மட்டும் நிலப் போக்குவரத்து ஆணையமும் காவல்துறையும் கண்காணிக்கின்றன. இருக்கைப் பாதுகாப்பு வாரைக் கட்டப் பயன்படுத்தப்படும் கிளிப் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள அவர்கள் சோதனை நடத்தி நான் பார்த்ததில்லை,” என்று தமது முழுப் பெயரைக் கூற மறுத்துவிட்ட லீ கூறினார்.
“இருக்கைப் பாதுகாப்பு வாரைத் தளர்வாக அணிவதில் ஆபத்து ஏதுமில்லை என்பது எனது கருத்து. நான் முதலில் 1970களில் வாகனம் ஓட்டத் தொடங்கினேன். அப்போது சில கார்களில் இருக்கைப் பாதுகாப்பு வார் இல்லை,” என்றார் அவர்.
இருக்கைப் பாதுகாப்பு வாரைத் தளர்வாக அணிவதற்குத் தேவையான சாதனங்களைச் சிலர் இணையம்வழி வாங்குகின்றனர். சிறார் உட்பட அனைவருக்கும் இவை பாதுகாப்பானவை என்று அச்சாதனங்களை விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாத தொடக்கம் வரை ஏறத்தாழ 20 பயணங்களின்போது இத்தகைய அணுகுமுறையைக் கையாளும் ஏழு டாக்சி, தனியார் வாடகைக் கார் ஓட்டுநர்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் கண்டுபிடித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இத்தகைய சாதனங்களைச் சிங்கப்பூரில் பயன்படுத்த அனுமதி இல்லை என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. விபத்து நிகழ்ந்தால் அது ஓட்டுநருக்கும் பயணிகளுக்கும் ஆபத்தாக முடியலாம் என்று அது கூறியது.
வாகன இருக்கைப் பாதுகாப்பு வார் எவ்வகையிலும் மாற்றியமைக்கப்படக்கூடாது என்று ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
விதிமுறைக்கு உட்படாத வாகன இருக்கைப் பாதுகாப்பு வாரைக் கொண்ட வாகனத்தைப் பயன்படுத்தும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
இருக்கைப் பாதுகாப்பு வார் அணியாத ஓட்டுநர்கள், பயணிகள் ஆகியோருக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை, $1,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
இவ்விரு குற்றங்களையும் தொடர்ந்து செய்பவர்களுக்கும் தண்டனை இரட்டிப்படையும்.

