பிரிட்டனின் ‘மேசிவ் அட்டாக்’ இசைக் குழுவின் உறுப்பினர்கள் இருவர்க்குக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், அவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 29ஆம் தேதி நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது மேடையில் அவர்கள் பாலஸ்தீனக் கொடியைப் பிடித்திருந்ததைத் தொடர்ந்து அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இந்த இசைக் குழுவினர் எதிர்காலத்தில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான விண்ணப்பம் எதற்கும் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் அனுமதி வழங்காது. வெள்ளிக்கிழமை (ஜூலை 31) பின்னேரத்தில் காவல்துறையும் ஆணையமும் வெளியிட்ட கூட்டறிக்கையில் அந்த விவரம் இடம்பெற்றுள்ளது.
த ஸ்டார் தியேட்டரில் ஜூலை 29ஆம் தேதி நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் காணொளி ஒன்று ரெடிட் (Reddit) சமூக ஊடகத் தளத்தில் பதிவிடப்பட்டது. அதில் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்யும்போது இசைக் குழு உறுப்பினர்கள் இருவர் மேடையில் பாலஸ்தீனக் கொடியை ஏந்தியிருப்பதைக் காண முடிகிறது. இந்த இசைக் குழுவின் தற்போதைய அனைத்துலகச் சுற்றுப்பயணத்தில் சிங்கப்பூரில் திட்டமிடப்பட்டிருந்த ஒரே நிகழ்ச்சி அது.
மேசிவ் அட்டாக் குழு இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் 1988ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்போது இந்தக் குழுவில் பாடகரும் பாடலாசிரியருமான 61 வயது டெல் நாஜா, 66 வயது மார்ஷல் இருவரும் இருக்கின்றனர்.
சிங்கப்பூரில் முறையான அனுமதியின்றி வெளிநாட்டு தேசியச் சின்னங்களைப் பொதுவெளியில் காட்சிப்படுத்தக்கூடாது. இதன் தொடர்பிலான சட்டத்தை மீறுவோர்க்கு $500 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.
கொடியைக் காட்டியதைத் தொடர்ந்து, இசை நிகழ்ச்சியில், ‘அரசியல் காரணத்திற்கு ஆதரவளித்த செயல்களுக்காகவும் வெளிநாட்டுக் கொடியை விரித்ததற்காகவும்’ குழு உறுப்பினர்கள் இருவர் மீதும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

