சிங்கப்பூரில் நிறுவனங்களைத் தொடங்குவதற்காக தங்களுடைய பெயரை இயக்குநராகப் பதிவு செய்ய உதவும் உள்ளூர்க்காரர்கள், அந்த நிறுவனத்தை மேற்பார்வையிடத் தவறினால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
குற்றவாளிகள், ஏன் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடாது என்பதை விளக்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது என்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது.
2024 ஏப்ரலில் மாவட்ட நீதிபதியால் $8,500 அபராதம் விதிக்கப்பட்ட கணக்காளர் ஷெங் ஜியா தொடர்பான வழக்கில் தண்டனை விதிப்பது குறித்து வழிகாட்டுதல் வெளியிடப்பட்டது.
அந்த வழக்கில் 41 வயதான சிங்கப்பூர் நிரந்தரவாசியான ஷெங், ஐந்து ஆண்டுகளுக்கு நிறுவன இயக்குநராகச் செயல்பட தகுதியற்றவர் என்று அறிவிக்கப்பட்டார்.
பிப்ரவரி 19ல் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு எதிராக அரசுத் தரப்பு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு, மேல்முறையீட்டை ஏற்றுக் கொண்டு ஷெங்கிற்கு அபராதத்திற்குப் பதிலாக 10 மாதம் சிறைத்தண்டனை விதித்தது.
ஏப்ரல் 24ஆம் தேதியன்று நீதிமன்றம் தனது தீர்ப்புக்கு எழுத்துப்பூர்வமாக காரணங்களை வெளியிட்டது.
வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் வேண்டுகோளை ஏற்று சிங்கப்பூரில் நிறுவனங்களைத் தொடங்க உதவும் தொழிலை ஷெங் நடத்தி வந்ததாக அது கூறியது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் பதிவு செய்யும் நிறுவனங்களில், குறைந்தபட்சம் உள்ளூர்க்காரர் ஒருவர் இயக்குநராக இருக்க வேண்டும். ஷெங், தன்னை இயக்குநராகப் பதிவு செய்து வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கணக்குகளைத் திறக்க உதவினார்.
மூன்று சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அவர் இத்தகைய சேவைகளை வழங்கினார். 2019 நவம்பரில் சீனாவின் ஷென்ஷென்னிலும் ஒரு கிளை அலுவலகத்தை அவர் அமைத்தார்.
அவரது சேவைகளுக்கு ஆண்டுக்கு $1,000 முதல் $1,400 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
பின்னர் மேற்கொண்ட விசாரணைகளில் அவர், 384 நிறுவனங்களை அமைக்க அல்லது இயக்குநராகப் பதிவு செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
இந்த வியாபாரம் வெற்றிகரமாக இருந்ததால் ஷெங், எர் பெங் ஹுவா என்ற மற்றொரு உள்ளூர்வாசியை இயக்குநராகச் செயல்படவும் தனது வாடிக்கையாளர்களுக்கு அமைக்கப்பட்ட நிறுவனங்களுக்கான வங்கிக் கணக்குகளைத் திறக்கவும் நியமித்தார்.
ஆனால் நிறுவனங்களின் விவகாரங்களை இருவரும் மேற்பார்வையிடவில்லை.
2020ஆம் ஆண்டில் வெளிநாட்டு மோசடிகளிலிருந்து பெற்ற கணிசமான தொகைகள் அத்தகைய மூன்று நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் வழியாக அனுப்பப்பட்டன. இதையடுத்து ஷெங்கின் விவகாரம் விசாரணைக்கு வந்தது.