சிங்கப்பூர் செல்வந்தர் பீட்டர் லிம்முக்கு எதிராக போராட்டம் நடத்தியது தொடர்பாக ஸ்பெயின் தம்பதியருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்து உள்ளது.
சுற்றுப்பணியாக சிங்கப்பூர் வந்திருந்த டேனி குவெஸ்டா, மிரெயா சேயெஸ் என்னும் அந்தத் தம்பதியர் விசாரணையில் இருந்தபோது அவ்விருவரின் கடப்பிதழ்கள் முடக்கி வைக்கப்பட்டு இருந்தன.
காவல்துறையின் எச்சரிக்கைக்குப் பின்னர் 34 வயது ஆடவரும் 30 வயதுப் பெண்ணும் சிங்கப்பூரைவிட்டுச் சென்றுவிட்டதாகக் காவல்துறை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) தெரிவித்தது.
ஸ்பானிய காற்பந்துக் குழுவான வெலன்சியாவின் (Valencia) உரிமையாளரான பீட்டர் லிம்முக்கு எதிராக, பொது ஒழுங்குச் சட்டத்தின்கீழ் அனுமதி பெறாமல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றது தொடர்பாக அந்தத் தம்பதியரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அவர்களில் ஆடவரான குவெஸ்டா, அக்டோபர் 3ஆம் தேதி லிம்முக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகையை உயர்த்திப் பிடித்தவாறு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றி இருந்தார்.
எஸ்பிளனேட், மரினா பே போன்ற பல்வேறு இடங்களில் அந்தப் பதாகையைக் காட்டியவாறு அவர் நின்றிருந்த படங்கள் அவை.
சிங்கப்பூரின் வசதிபடைத்த செல்வந்தர்களில் ஒருவரான திரு லிம், வெலன்சியா காற்பந்துக் குழுவை கடந்த 2014ஆம் ஆண்டு வாங்கினார். அதற்காக, கடந்த சில ஆண்டுகளாக ஸ்பெயின் ரசிகர்கள் அவருக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் போராட்டமும் நடத்தி வருகின்றனர். அணியின் நட்சத்திர விளையாட்டாளர்களை விற்றது, பயிற்றுநர்களை நீக்கியது உள்ளிட்ட பல நடவடிக்கைகளுக்காக திரு லிம்மை அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
வழக்கின் உண்மைகளையும் சூழ்நிலைகளையும் கவனத்தில் கொண்டு அந்தத் தம்பதியருக்கு எதிராகக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதுகுறித்து தலைமைச் சட்ட அதிகாரியுடன் கலந்து பேசியதாகவும் காவல்துறை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.


