குடியிருப்புப் பகுதிகளிலிருந்து குரங்குகளை விரட்ட தேசிய பூங்காக் கழகம் பயன்படுத்தும் புதிய கருவிகளில் தண்ணீர் ‘ஜெல்’ மணிகளைப் பாய்ச்சும் துப்பாக்கிகளும் அடங்கும்.
பொங்கோலில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புப் பேட்டையில் நீண்ட வால் கொண்ட ‘மக்கா’ குரங்குகளை விரட்ட தண்ணீர் ஜெல் மணிகள் பாய்ச்சப்படுவதைக் காட்டும் காணொளிகள் இணையத்தில் பரவலாயின.
மனிதர்களுக்கும் குரங்குகளுக்கும் மோதல் ஏற்படுவதைத் தடுக்க அதிகாரிகளும் விலங்குகள் நல அமைப்புகளும் நகர்ப்புறங்களிலிருந்து குரங்குக் கூட்டங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றன.
தேசிய பூங்காக் கழகம் 2024ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து பொங்கோலில் தண்ணீர் ஜெல் துப்பாக்கிகளைப் பயன்படுத்துகிறது.
அந்தத் துப்பாக்கியிலிருந்து எழும் பலத்த சத்தமும் பாய்ச்சப்படும் தண்ணீர் ஜெல் மணிகளும் பாதுகாப்பை அதிகரிப்பதாக தேசிய பூங்காக் கழகத்தின் வனவிலங்குகள் மேலாண்மைக்கான குழு இயக்குநர் ஹவ் சூன் பெங் கூறினார்.
குரங்குகளை விரட்டும் நடவடிக்கைகளுக்கு சில குரங்குகள் பழகிவிட்டதால், குடியிருப்பு பகுதிகளிலிருந்து அவற்றை, வனப்பகுதிக்கு விரட்ட, கூடுதல் நடவடிக்கையாகக் கழகம் தண்ணீர் ஜெல் மணிகளைப் பயன்படுத்துவதாக அவர் கூறினார்.
குடியிருப்புப் பேட்டைகளில் குரங்குப் பிரச்சினையை நிர்வகிக்க அதிகாரிகள் மேற்கொண்டுள்ள மற்ற புதிய நடவடிக்கைகளில் அவற்றுக்கு கருத்தடை செய்வதும் அடங்கும்.
தற்போது அதிகாரிகளும் அமைப்புகளும் குரங்குகளைக் கிண்டல் செய்யாமல், சத்தம்போட்டு, தரையில் தடிகளால் தட்டி, குரங்குகளை விரட்டுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
குரங்கு கண்காணிப்பு என்பது அவற்றைத் தடுப்பது மட்டுமல்ல என்று கூறினார் ஜேன் குட்டால் சிங்கப்பூர் கழகத்தின், குரங்கு கண்காணிப்புத் திட்டத்திற்கு தலைமை தாங்கும் செல்வி சப்ரினா ஜப்பார்.
“இது குரங்குகளை மனிதப் பகுதிகளுக்குள் செல்லாமல் பழக்குவதும், அவற்றின் முன் நடந்துகொள்ள வேண்டிய சரியான வழிமுறைகளை மக்களுக்குக் கற்பிப்பதும் ஆகும்,” என்று அவர் கூறினார்.
வடக்கு பொங்கோல் குளோஸ் முதல் கோனி தீவு வரையிலான புதிய குடியிருப்புப் பேட்டைகளில் கடந்த சில ஆண்டுகளாக குரங்குகள் அதிகம் காணப்படுகின்றன. சிலவேளைகளில் வீடுகளுக்குள் நுழைகின்றன, கார்களைச் சேதப்படுத்துகின்றன.
2024 பிற்பகுதியிலிருந்து 2025ன் முற்பகுதி வரை, தேசிய பூங்காக் கழகம் பொங்கோலில் குரங்குப் பிரச்சினை தொடர்பாக கிட்டத்தட்ட 200 புகார்களைப் பெற்றது. அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த 2023 முதல் பல குரங்களுக்குக் கருத்தடை செய்யப்பட்டது. ஆக்ரோஷமானதாகக் கருதப்பட்ட சில குரங்குகள் கொல்லப்பட்டன.
ஜெல் மணிகள் குரங்குகள் மீது பாய்ச்சப்படுவதில்லை. ஆனால் கவனக்குறைவாக அதன்மீது பட்டால், அதற்கு பாதிப்பு ஏற்படுத்தாது அது உடனே சிதறி விடும் திரு ஹவ் கூறினார்.
எனினும் தங்கள் குடியிருப்புப் பகுதியில் இருந்து குரங்குகளை விரட்ட அத்தகைய துப்பாக்கிகளை பொதுமக்களும் வாங்கிப் பயன்படுத்தலாம் என்று விலங்கு நல அமைப்புகள் கவலை தெரிவித்தன.
அதிகாரிகள் மட்டுமே அவற்றைப் பயன்படுத்தலாம் என்றும் பொதுமக்கள் இந்த விஷயத்தை தாங்களே கையாளக் கூடாது என்றும் ஜேன் குட்டால் சிங்கப்பூர் கழகத்தின் தலைவர் ஏண்டி ஆங் கூறினார்.