லிட்டில் இந்தியாவில் உள்ள வீராசாமி சாலையில் டிசம்பர் 17ஆம் தேதி அதிகாலை நீர்க் குழாய் ஒன்றில் கசிவு ஏற்பட்டது. குழாயைப் பழுதுபார்க்க வீராசாமி சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டதை அடுத்து அந்தச் சாலைப் பகுதி மீண்டும் போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டதாக பொதுப் பயனீட்டுக் கழகம் டிசம்பர் 18ஆம் தேதி தெரிவித்தது.
நீர்க் குழாய்க் கசிவு, வீராசாமி சாலையிலுள்ள புளோக் 638 அருகே அதிகாலை சுமார் 4.15 மணிக்கு ஏற்பட்டதாக கழகம் குறிப்பிட்டது. ஜாலான் புசார் சாலைக்கும் கம்போங் கபூர் சாலைக்கும் இடையே உள்ள வீராசாமி சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்ட கழகத்தின் சேவைப் பிரிவினர், கசிவு ஏற்பட்ட இடத்தை அடையாளங்கண்டதாக கழகம் தெரிவித்தது.
அவ்விடத்தைச் சுற்றியுள்ள இடங்களில் நீர் விநியோகம் பாதிக்கப்படவில்லை என்று கழகம் தகவல் வெளியிட்டது. நீர்க் குழாய் கசிவு ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுவதாக அது தெரிவித்தது.
நீர்க்கசிவு காரணமாக புளோக் 638 அருகில் உள்ள சாலைப் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதாக ஷின்மின் நாளிதழ் தெரிவித்தது.
அருகில் உள்ள காப்பிக்கடையில் உணவுக் கடை வைத்திருக்கும் சிலர், நீர் விநியோகம் பாதிக்கப்படும் என்று அஞ்சி தங்கள் கடையை மூடியதாக அறியப்படுகிறது.
இதையடுத்து, டிசம்பர் 17ஆம் தேதி மாலை பழுதுபார்ப்புப் பணிகள் முடிவடைந்துவிட்டதாக கழகம் தெரிவித்தது.